சென்ற ஆண்டு நடந்த இறுதிகட்ட போரில் விடுதலைப்புலிகள் முற்றிலு மாக அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்த பிறகு, விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வ இணையதளங்கள் காணாமல் போயின. அதன் பிறகு விடுதலைப் புலிகளுக்கென்று அதிகாரப்பூர்வமாக இணையதளம் இல்லாமல் இருந்தது. தற்போது எல்டிடிஈ பிரஸ்.காம் என்ற புதிய இணைய தளம் உருவாக்கப் பட்டு, விடுதலைப்புலிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இணைய தளத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் செய்தி தொடர்பாளர் ச.தமிழ்மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு,
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மிகுந்த நலமுடனும், பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
அதோடு தேசியத் தலைவர் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.
சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.
எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புகளை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.
இழப்புகள் என்பது எமக்கும், எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல. சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.
சிங்கள பேரினவாத அரசு எமது மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன், எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
No comments:
Post a Comment