Tuesday, April 5, 2011

காங்கிரசை தண்டிக்க வேண்டும்: பழ. நெடுமாறன்

ஈழத் தமிழர் படுகொலைக்கு துணை நின்ற காங்கிரசை இந்த தேர்தலில் மக்கள் தண்டிக்க வேண்டும் என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மதுவின் மயக்கத்தில் மக்களை ஆழ்த்தியும் இலவசங்கள் மூலம் மக்களை ஏமாற்றவும் முயற்சி நடைபெறுகிறது. பணத்தை வைத்துப் பதவி, பதவியை வைத்துப் பணம் என்ற நச்சுச் சுழற்சியில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை விடுவிக்க வேண்டிய பொறுப்பு வாக்காளர்களுக்கு உண்டு.
சந்தர்ப்பவாத அரசியல் பலிபீடத்தில் கிடத்தப்பட்டுக் கிடக்கும் ஜனநாயகத்தை மீட்காவிட்டால் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டு பணநாயகம் அரியணை ஏறிவிடும். இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப் பெரிய இனப்படுகொலையான ஈழத்தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் கட்சியை தண்டியுங்கள்.
ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும், காவிரி, முல்லைப் பெரியாறு, சேதுக் கால்வாய் போன்ற தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளுக்காகவும், தமிழக இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு எதிராகவும் குரல் கொடுக்கும் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களையும் தமிழ்த்தேசிய உணர்வுள்ள வேட்பாளர்களையும் ஆதரித்து வெற்றி பெறவைக்க வேண்டுகிறேன்.
ஊழலற்ற, நேர்மையான, நீதியான ஆட்சியைத் தரவல்லவர்கள் யார் என்பதைத் தேர்ந்து தெளிந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு வாக்காளப் பெருமக்களை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

ebook