Tuesday, April 5, 2011

காங்கிரஸ் உள்ளவரை கனவிலும் இந்தியா வல்லரசாகாது : சீமான்

காங்கிரஸ் உள்ளவரை கனவிலும் இந்தியா வல்லரசாகாது : சீமான். "காங்கிரஸ் கட்சி இந்த மண்ணில் இருக்கிறவரைக்கும் இந்தியா ஒரு போதும் வல்லரசாக முடியாது" என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சென்னையில் காங்கிரஸ் போட்டியிடும் மயிலாப்பூர், ராயபுரம், திரு.வி.க.நகர், தியாகராயர் நகர் ஆகிய இடங்களில், அக்கட்சியைத் தோற்கடிக்குமாறு கேட்டு நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்த பரப்புரைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.Image
இக்கூட்டங்களில் சீமான் பேசுகையில், "ஈழத்தில் நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது சகோதரி இசைப்பிரியாவை கொடூரமாக கொன்றொழித்த காட்சியை இங்கிலாந்தின் சானல் 4 தொலைகாட்சி வெளியிட்டபோது அதைப் பார்த்து அதிர்ந்து அனைத்துலக நாடுகளும் ராஜபக்சவுக்கு கண்டனம் தெரிவித்தபோதும், எமது தாய்த் தமிழ் உறவுகள் தங்களது தந்தையர் நாடாக நேசித்த இந்திய அரசு ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காமல் மவுனமாக இருந்தது. ஏனென்றால், போரை அங்கு நடத்தியது இந்திய காங்கிரஸ் அரசுதான். காங்கிரஸ் கட்சி இந்த மண்ணில் இருக்கிறவரைக்கும் இந்தியா ஒரு போதும் வல்லரசாக முடியாது. ஊழல் செய்வதில் தான் இந்தியா அரசு முதலிடத்தில் உள்ளது. 500கும் அதிகமான தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுகொன்றபோதும் கூட தமிழர்களின் நலனில் அக்கறை இல்லாத காங்கிரஸ் கட்சி இதுவரை பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தையாவது பார்த்து ஆறுதல் கூறியதுண்டா?

தமிழர்களின் கனவு தேசமான தமிழீழத்தில் நடைபெற்ற போரில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், அதற்கு இரண்டு கரமும் கொடுத்து உதவிய காங்கிரஸ் கட்சியை தமிழர்களின் தாயக நிலமான தமிழகத்தில் தமிழர்கள் விரட்டியடித்தார்கள் என்று வரலாற்றில் வரவேண்டும். எனவே, காங்கிரசின் கை சின்னத்தை பார்த்தால் கண்ணை மூடி கொண்டு அதை எதிர்த்து நிற்கும் சின்னத்தில் வாக்களியுங்கள்" என்றார் சீமான். தமிழருவி மணியன் பேசுகையில், "தந்தை பெரியாரின் வாரிசு, அண்ணாவின் தம்பி என்று தன்னை கூறிக்கொள்ளும் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியை இந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்ற அவர்களின் இலட்சியத்தை புறம் தள்ளிவிட்டு ஆட்சியை மட்டும் இந்த வயதிலும் பிடிக்கப் பார்க்கிறார். இந்த 5 ஆண்டுகளில் தமிழர்களின் பிரச்னைக்காக ஒரு முறை கூட டெல்லி செல்லாத கருணாநிதி, தன் வாரிசுகளுக்கு பதவி வாங்கி தருவதற்கு மட்டும்தான் டெல்லி சென்றுள்ளார். தமிழனத்தை பற்றி பேசும் நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவற்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நீங்கள் எப்படி தமிழினத் தலைவனாக இருக்க முடியும்?" என்றார் தமிழருவி மணியன்.

 

No comments:

Post a Comment

ebook