Tuesday, April 5, 2011

சீமான் பிரசாரத்தால் கவலைப்படவில்லை: காங்கிரஸ்

தங்களுக்கு எதிரான நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் பிரசாரத்தால் கவலைப்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், “ராகுல் காந்தி ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வரும்போது முதல்வர் கருணாநிதியை சந்திக்கவில்லை என்று கூறுகிறீர்கள். அவர் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுபற்றி கூறியிருக்கிறார்.
முதல்வர் கருணாநிதி ஒரு மூத்த தலைவர். அவர் மீது தனக்கு மிகுந்த அன்பு இருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார். மூத்த தலைவர்கள் மீது ராகுல் காந்திக்கு எப்போதும் மிகுந்த மரியாதையும், அன்பும் உள்ளது.
தமிழகத்தில் வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை. மக்களை ஏமாற்றும் நயவஞ்சகத்தனத்தின் ஒரு பகுதியே அது. கடந்த 2009ம் ஆண்டு இதேபோல ஒரு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் எங்கள் கூட்டணிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்று அந்த கருத்துக்கணிப்பை பொய்யாக்கியது. அதேபோல இந்த முறையும் ஜனநாயக முற்போக்கு கூட்டணிதான் வெல்லும்.
மேலும், அந்தக் கருத்துக்கணிப்பில் அரசியல் சாதனைகளை கூறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் மையக் கருத்தே மத்திய, மாநில அரசுகளே எண்ணற்ற சாதனைகள்தான். எனவே அந்த சாதனைகளை மக்கள் மறக்காமல் இந்த கூட்டணியை வெற்றி பெறச் செய்வார்கள்.
சோனியா காந்தி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அவர்கள் உண்மையான காங்கிரஸ்காரர்களாக இருக்க மாட்டார்கள். எனவேதான் அவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை நீக்க எனக்கு அதிகாரம் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் சீமான் எங்கள் கூட்டணியை எதிர்த்து பிரசாரம் மேற்கொண்டார். அதையும் மீறி நாங்கள் வெற்றிபெற்றோம். எங்களுக்கு கூட்டணி பலம் உள்ளது. எனவே இந்தப் பிரச்சாரத்தை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
தேர்தல் ஆணையம் நியாயமாகவும், பாரபட்சமின்றி நடந்து கொள்ளவேண்டும்.மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்குப் பதிவு செய்திருப்பதை கண்டிக்கிறேன்.
நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்,” என்றார் தங்கபாலு.

No comments:

Post a Comment

ebook