Wednesday, April 6, 2011

ஒரு கொலைகாரனுக்கு திரும்பத் திரும்ப சிவப்புக் கம்பள வரவேற்பு ஏன்?

ங்குள்ள தமிழரை இந்தியராக இந்த நாடு மதிக்கவே இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது சோனியா காந்தி – மன்மோன் சிங்கின் மத்திய அரசு!
இலங்கையில் நடந்த தமிழின அழிப்பைப் பார்த்து உலகமே ராஜபக்சேவை கொலைகாரன் என்றும், இனப் படுகொலைக்குக் காரணமானவன் என்றும், போர்க்குற்றவாளி என்றும் முத்திரைக் குத்தி வரும் நேரத்தில், அந்தக் கொலைகாரனை தாங்கிப் பிடித்து, சம அந்தஸ்து வழங்குவதில் மும்முரம் காட்டுகிறது மத்திய அரசு.
இந்தியாவில் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் அழைப்பு போவது, தமிழர் பிணங்களின் மீது நின்று எக்காளமிட்ட இந்த கொலைகாரனுக்குத்தான். இங்குள்ள தலைவர்களோ இன உணர்வாளர்களோ எழுப்பும் கூக்குரலை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை மன்மோகன் அரசு.
ராஜபக்சேவும் இந்திய அரசின் மனநிலையைப் புரிந்து கொண்டு, முடிந்தவரை தமிழரையும் தமிழர் தலைவர்களையும் அசிங்கப்படுத்துவதில் குறியாக உள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்த இலங்கை சென்னை இந்திய பாராளுமன்றத்தின் உறுப்பினரும் ஒரு பெரிய கட்சியின் தலைவருமான திருமாவளவனை (அவர் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகளை நாம் வைத்தாலும் கூட) கொழும்பு விமான நிலையத்தில் கால்வைக்கக் கூட அனுமதிக்காமல் அவமதித்துத் திருப்பி அனுப்பிய இனவெறியனான ராஜபக்சேவை, அடுத்த ஒரே மாதத்தில் ரத்தினக் கம்பள வரவேற்பு கொடுக்க அழைக்கிறது மத்திய அரசு. அதுவும் ஏதோ தலைபோகிற அரசியல் காரியத்துக்கல்ல… வர்த்தக ஒப்பந்தப் பேச்சுக்கல்ல… ஏற்கெனவே வெற்றி தோல்வி நிச்சயக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் ஆட்டத்தைக் கண்டு களிக்க.. விவஸ்தை கெட்ட ஜென்மங்கள்!
அவனும் வெட்கமே இல்லாமல் இந்தியாவுக்கு வந்து, சென்னையில் இறங்கி அங்கிருந்து திருப்பதிக்கு மகா பாதுகாப்புடன் போய், வெங்கடாஜலபதியிடம் ‘இலங்கை ஜெயிக்க வேண்டும்; இந்திய அணி தோற்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து கொண்டு… அடப்பாவிகளா, என்னதான் நடக்கிறது இந்த நாட்டில்?
சென்னையில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் என அத்தனை கிரிமினல் வேலைகளையும் செய்த, தேடப்படும் குற்றவாளியாக இந்திய நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா என்ற கிரிமினல், சகல பாதுகாப்பு மரியாதைகளுடன் இந்திய பிரதமர் வீட்டில் அவருடன் விருந்துண்டு மகிழ்கிறான்; பல்லாயிரம் தமிழர்களைக் கொன்ற, உலகத்தால் கொலைகாரன் என்று முத்திரை குத்தப்பட்ட ராஜபக்சே, முதல் மரியாதைக்குரியவனாக தமிழகத்திலும் இந்தியாவிலும் நடமாடுகிறான்… ஆனால், இந்த மண்ணின் மைந்தர்கள், இழந்த தம் உறவுகளுக்காக மனம் வெதும்பி குரல் கொடுத்தால் சிறைவாசமா?
என்ன சாதிக்க நினைக்கிறது இந்தியா?
‘எங்கள் ஆதரவுடன் நடந்த தமிழர் அழிப்பு நடவடிக்கையைச் செய்து முடித்த ராஜபக்சேவை யாரும் இனி போர்க்குற்றவாளி என்று சொல்லக் கூடாது. இந்தியாவின் சமமான நண்பன், தமிழர் இன அழிப்பு என்பது இந்தியாவின் அறிவிக்கப்படாத வெளியுறவுக் கொள்கைகளில் ஒன்று’, என்றா?
ஒரு சினிமா விழாவுக்கு தடையை மீறிப் போன நடிகையை புறக்கணிப்போம் என்று சொல்லும் ரோசக்காரர்களே… யோசித்துப் பாருங்கள்… அதே இலங்கையின் ராஜபக்சேவை இங்கழைத்து கூடிக் குலவுகிறது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. இவர்களை என்ன செய்யலாம்… எப்படி தண்டிக்கப் போகிறோம்?
ராஜபக்சே இந்தியாவுக்கு வந்தால் தமிழர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று தெரிந்தும், வெட்டுக்காயத்தில் உப்பை வைத்துத் தேய்த்துத் திருப்திப்படும் குரூர புத்தி கொண்ட காங்கிரஸ் ஆட்சியாளர்களை ஓட ஓடத் துரத்த முன்பு வாய்த்த சந்தர்ப்பத்தைத்தான் தெரிந்தே நழுவ விட்டோம். இந்த முறை, மீண்டும் ஒரு சிறிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.
தமிழ் மண்ணில் காங்கிரஸ் என்ற கட்சி முன்பு இருந்தது என்று சொல்லும் நிலையை இந்தத் தேர்தலில் ஏற்படுத்துவதுதான், இந்த அவமானங்களிலிருந்து தமிழர்கள் கொஞ்சமாவது தலைநிமிர வழி! அடுத்த முறை கொலைகாரன் ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைக்கும் முன் தமிழர்கள் மனநிலை என்ன என்றாவது மத்திய ஆட்சியாளர்கள் யோசிக்க இந்த ஆயுதம் சற்றேனும் உதவக்கூடும்!
குறிப்பு: இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எந்த அளவுக்கு ராஜபக்சேவுடன் இணக்கமாக உள்ளனர், கூடிக் குலாவி விருந்துண்ணுகின்றனர், தமிழர் பகுதிகளில் ராஜபக்சே அரசியல் வெற்றிகள் பெற உதவுகின்றனர்…  இங்குள்ளவர்கள் எதிர்த்து என்ன பயன் என்ற கேள்விகளை சிலர் எழுப்பலாம்.
தலைவர்கள் எல்லாம் தமிழர் ஆகிவிட முடியாது. டக்ளஸ்கள், கருணாக்கள் வழியில் இன்னும் எக்கச்சக்கமாய் பிழைப்புவாதிகள் அங்கே உருவாகியிருக்கலாம். ஆனால் ராணுவத்திடம் சின்னா பின்னமாகி சிதைந்த தமிழ்ச் சொந்தங்கள் நம்பியது இங்குள்ள தமிழ் உறவுகளைத்தான். அந்த உணர்வுக்கு தரும் மரியாதை, தமிழர் இன அழிப்புக்கு துணை நின்ற காங்கிரஸை புறக்கணிப்பது… ஆம்… காங்கிரஸை மட்டும். தமிழர் அரசியலில் இனி காங்கிரசுக்கு இடமில்லை என்ற நிலைதான் முக்கியம்!  எனவே நம் உறவுகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையைச் செய்வோம்!

No comments:

Post a Comment

ebook