Sunday, April 3, 2011

உலகக்கிண்ண போட்டிக்குப் பின்னால் உள்ள சிறிலங்காவின் கோரமுகம்

இந்திய- சிறிலங்கா அணிகள் மோதப் போகும் இந்த ஆட்டத்தைக் காண சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 30 பேர் கொண்ட பெரியதொரு பட்டாளத்துடன் மும்பைக்கு போகப் போகிறார்.

அரையிறுதி ஆட்டத்தில் சிறிலங்கா அணி நியுசிலாந்தை தோற்கடித்து- இறுதியாட்டத்துக்குத் தகுதி பெறுவதற்கு முன்னரே, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் செயலகம், சரத் பவாருடன் தொடர்பு கொண்டு 30 விஜபி ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொண்டது.

தெற்காசியாவில் இப்போது கிரிக்கெட் ஒரு அரசியல் இராஜதந்திர விளையாட்டாக மாறிக் கொண்டிருக்கிறது.

அரசியல் ரீதியாக மோதிக் கொள்ளும் பாகிஸ்தானும் இந்தியாவும் அரையிறுதி ஆட்டத்திலும் மோதின.

இந்தப் போட்டியைக் காண மொஹாலிக்கு வருமாறு பாகிஸ்தான் பிரதமர் கியானிக்கு அழைப்பு விடுத்தார் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் கியானியும் இந்தியா சென்றார்.

மன்மோகன்சிங்கும் கியானியும் மொஹாலியில் அருகருகே அமர்ந்திருந்து போட்டியையும் பார்த்தனர். இடையிடையே, பேசியும் கொண்டனர்.

பாகிஸ்தான் பிரதமருக்கு மன்மோகன்சிங் விடுத்த அழைப்பைப் பார்த்து, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் நியுசிலாந்துப் பிரதமருக்கு ஜோன் கீயிடம் கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்

புலியைப் பார்த்து பூனை முதுகில் சூடு போட்டுக் கொண்ட கதையாக இது முடிந்து போனது.

கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்கு இருக்கிற வேலைகளையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு, நியுசிலாந்துப் பிரதமர் கொழும்புக்கு வந்து விடுவார் தப்புக்கணக்குப் போட்டு விட்டார் அவர்.

ஒருவேளை தன்னைப் போலத் தான் அவரும் இருப்பார் என்று கருதினாரோ தெரியவில்லை.

பாகிஸ்தானுக்கு மன்மோகன்சிங் அழைப்பு விடுத்த பின்னணியில் உள்ள முக்கியத்துவத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட, நியுசிலாந்துப் பிரதமருக்கு மகிந்த ராஜபக்ஸ விடுத்த அழைப்பில் இருக்கவில்லை.

அந்தளவுக்கு இது ஒரு அடி முட்டாள்தனமான அழைப்பு என்றே கூறலாம்.

தனது நிகழ்ச்சி நிரலை மாற்ற முடியாது என்று கூறி இந்த அழைப்பை நிராகரித்து விட்டார் நியுசிலாந்துப் பிரதமர்.

இது மகிந்த ராஜபக்ஸவுக்குப் பெரும் அவமானமாகப் போய் விட்டது.

ஆனாலும் அதை எப்படி வெளிக்காட்டிக் கொள்வது?

இதனால், நியுசிலாந்து பிரதமர் தனது தூதுவராக புதுடெல்லியில் உள்ள நியுசிலாந்து தூதுவரை அனுப்பி வைக்கவுள்ளார் என்று கூறி மகிந்த ராஜபக்ஸவின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர சமாளித்துக் கொண்டார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதியாட்டத்துக்கு சிறிலங்கா அணி தகுதி பெற்றதும், எப்படியும் கிண்ணத்தைக் கைப்பற்றி முரளிதரனைக் கௌரவிக்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்ஸ கூறினார்.

நாளை 2ம் திகதி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் நடைபெறப் போகிறது.

இதில் சிறிலங்கா அணி வெற்றி பெறுமா- இந்திய அணி வெற்றி பெறுமா என்று ஆரூடம் சொல்லும் நிலையில் நாம் இல்லை.

ஆனால் இந்தப் போட்டியில் சிறிலங்கா அணி வெற்றி பெறுவதானது தமிழர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதத்தின் கரங்களை பலப்படுத்தப் போகிறது என்பது மட்டும் உண்மை.

அது எப்படி என்று விபரிக்க முன்னர் ஒரு சிறிய விடயத்தை கூற வேண்டும்.

முன்னரெல்லாம், பெரும்பாலான ஈழத்தமிழர்கள் இந்திய அணியையே ஆதரித்து வந்தனர்.

ஆனால் சிறிலங்கா அணி 1996இல் உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர், இளம் தமிழ் சமூகம் சிறிலங்கா அணியின் பக்கம் சாயத் தொடங்கியது.

இப்போதும் பெரும்பாலான இளம் சந்ததியினர் அத்தகைய வெறித்தனமான ஆதரவுடன் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

வெளிநாடுகளில் சிறிலங்கா அணியை புறக்கணிப்போம் என்று குரல்கள் எழுப்பப்பட்டாலும் தாயகத்தில் நிலைமை அவ்வாறு இல்லை என்பதை ஏற்கத் தான் வேண்டும்.

அரசியல் வேறு, விளையாட்டு வேறு, இரண்டையும் கலக்கக் கூடாது என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு.

இது உண்மை தான்.

தென்னாபிரிக்காவின் நிறவெறிக் கொள்கையால் அந்த அணியை சர்வதேச கிரிக்கெட் சபை பல ஆண்டுகளாக ஒதுக்கி வைத்திருந்தது.

சிறிலங்கா அணி மீதும் அத்தகைய தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் கூட அது சாத்தியமாகவில்லை.

ஆனால் கிரிக்கெட் போட்டிகளை சிறிலங்கா வெறும் விளையாட்டாக மட்டும் எடுத்துக் கொள்வில்லை.

அதை ஒரு நிழல் அரசியலாகவே நடத்துகிறது.

இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் அரசியல் வேறு விளையாட்டு என்று நியாயம் கூறிவருகின்றனர்.

இளந்தலைமுறையிடம் ஏற்பட்டுள்ள சிறிலங்கா அணி மீதான கவர்ச்சி ஆபத்தானதொன்று என்ற உண்மை அவர்களுக்குப் புரியாதிருப்பது ஆச்சரியம் தான்.

இப்போது விவகாரத்துக்கு வருவோம்.

உலகக் கிண்ணத்தை சிறிலங்கா அணி மீளக் கைப்பற்றுவது எப்படி சிங்களப் பேரினவாதத்தின் கரங்களை வலுப்படுத்தப் போகிறது என்ற கேள்விக்கான பதிலை இனிமேல் நாம் தேடுவோம்.

இன்றையதினம் (ஏப்ரல்1) கொழும்பில் இருந்து வெளியான ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் பேட்டி ஒன்று பிரசுரமாகியுள்ளது.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஒரு போர்க்குற்றவாளி என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அவர் யார் என்ற விபரங்களை எழுதி இந்தப் பத்தியை நீட்டிக்க விரும்பவில்லை.

இந்தப் பேட்டியில் சவீந்திர சில்வா, ஒரு வீத இராணுவப் பலத்தைக் கூட மிச்சமில்லாமல் புலிகளை தாம் அழித்து விட்டதாகக் கூறியுள்ளார்.

அதையெல்லாம் விட்டு விடுவோம்.

அவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பற்றிக் கூறியுள்ள இரண்டு விடயங்கள் தான் எமக்குத் தேவையானது.

முதலாவது விடயம்- இறுதிப்போட்டியில் சிறிலங்கா அணி பெறும் வெற்றியானது- புலிகளுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த படையினருக்கு அவர்கள் செலுத்தும் காணிக்கை என்று கூறியுள்ளதாகும்.

அடுத்தது- இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் சர்வதேச அளவில் சிறிலங்காவின் கௌரவத்தை உயர்த்திக் கொள்ள முடியுமாம்.

விளையாட்டில் பெறும் வெற்றியை போரில் இறந்த படையினரைக் கௌரவிப்பதாக அமையும் என்று சிறிலங்காவின் உயர்நிலை அரசுப் பிரதிநிதியே கூறியுள்ளார்.

அவர் இப்போது ஒரு இராணுவ அதிகாரி அல்ல.

ஐ.நாவுக்கான பிரதிநிதி என்ற வகையில் அவரது இந்தக் கருத்து சாதாரணமானதொன்றல்ல.

இந்தப் போரில் தமிழர்கள் எந்தளவுக்கச் சீரழிக்கப்பட்டனர் என்பது உலகறிந்த விடயம்.

பயங்கரவாதத்துக்கு எதிரான – மனிதாபிமான போர் என்ற பெயரில் தமிழ் மக்களை அழித்தொழிக்கவும், அடக்கியாளவும் நடத்தப்பட்டதே இந்தக் கொடிய யுத்தமாகும்.

அப்படியிருக்கும் போது போரில் இறந்த படையினருக்கு உலகக் கிண்ணத்தை அர்ப்பணிக்க நினைக்கும் சிறிலங்கா அரசின் நோக்கத்தை எப்படி வெறும் விளையாட்டுத்தனமானது என்று கூற முடியும்?

ஒருபுறத்தில் முரளிதரனை கௌரவிக்க உலகக் கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என்கிறார் சிறிலங்கா ஜனாதிபதி.

ஆனால் அவரது அரசின் பிரதிநிதியாக ஐ.நாவில் பணியாற்றுபவரோ போரில் மாண்ட சிங்களப் படையினருக்கான காணிக்கை என்கிறார்.

அப்படியானால் யார் கூறியிருப்பது உண்மை?

இப்போது சிறிலங்கா அரசின் கௌரவம் எந்தளவுக் சந்தி சிரித்துப் போய் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது நிகழ்த்திய போர்க்குற்றங்களால் தான் சிறிலங்காவின் புகழ் மங்கி பெரும்பாலான நாடுகள் முகம் கொடுக்காத அளவுக்கு நிலைமை உள்ளது.

போரின்போது நிகழ்த்திய அக்கிரமங்களால் தான் சிறிலங்காவுக்கு இந்தநிலை வந்தது.

இந்த நிலையை மாற்றியமைக்கவே சிறிலங்காவுக்கு உலகக் கிண்ணம் தேவைப்படுகிறது.

இதை நாங்கள் ஊகத்தில் சொல்லவில்லை.

சவீந்திர சில்வா தான் இப்படிக் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் பெறும் வெற்றி மூலம் சிறிலங்காவின் கௌரவத்தை மீட்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

கிரிக்கெட்டை மைதானத்துடன் நிறுத்திக் கொள்ளும் விளையாட்டாக அவர்கள் நினைக்கவில்லை.

அதற்குள் எத்தனை அரசியல் இலக்குகள்- வியூகங்களை வைத்திருக்கிறார்கள் என்பதை தமிழ்ச் சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிறிலங்கா அணியின் வெற்றியானது தமிழர்களின் எதிர்பார்ப்புகள், அபிலாசைகளைக் குழி தோண்டிப் புதைப்பதற்கும், அவர்களை நடுத்தெருவுக்கு விரட்டுவதற்குமே சிறிலங்காவுக்கு உதவும்.

அரசியல் வேறு விளையாட்டு வேறு என்ற வாதத்தை தூக்கிப் பிடித்துக் கொள்வது தமிழர்களின் முட்டாள்தனம் என்பதை விட வேறெப்படிச் சொல்ல முடியும்.

ஈழநேசன்

No comments:

Post a Comment

ebook