Friday, April 8, 2011

ஸ்ரீ.ல.சு.கட்சி மாநாட்டில் இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்

கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் பங்குகொள்ளும் வகையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தனது கட்சிப் பிரமுகர்களை அனுப்பி வைத்திருந்தார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:
காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மேபல் ரிபரோவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சியின் 19ஆவது மாநாடு, கொழும்பில் நேற்று ஆரம்பமானது. காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தனது கட்சித் தலைவர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை வீழ்த்தியதற்காக இலங்கை ஜனாதிபதிக்குத் தங்களுடைய பாராட்டுக்களைக் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவிப்பர் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் சந்திர தேவ் மற்றும் ஜெயந்தி நடராஜனை தனது கட்சி பிரதிநிதிகளாக அனுப்பி வைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் கரம்சிங், முதலில் கிஷோர்சந்திர தேவை தொடர்பு கொண்டு, கட்சியின் முடிவை தெரிவித்திருந்தார். கிஷோர்சந்திர தேவ் தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியிலும், அதன் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தவர். தமிழ் சரளமாக பேசக் கூடியவர். அதனால் அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க கட்சி தீர்மானித்தது.
ஆனால் அவர்,
“இப்போதுள்ள சூழ்நிலையில் இலங்கைக்குத் தான் செல்ல இயலாது”எனக் கட்சித் தலைமைக்கு தெரிவித்து விட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்களை அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்துவது, நிவாரணப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த, பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்பு தூதராக, நேற்று முன்தினம் காலை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்றிருந்தார்.
இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லஷ்மண் கதிர்காமர் நினைவு சொற்பொழிவில் அவர் கலந்து கொண்டார்.
பின் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகொல்லகமவை, பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

Thursday, April 7, 2011

அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம்

நத்தம் கோபால்பட்டியில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட நடிகர் வடிவேலுவால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் க.விஜயனை ஆதரித்து, நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்தார்.
அப்போது வடிவேலு பேசும்போது,   ‘’தி.மு.க.,வை ஆதரித்தால் உங்கள் இல்லங்களில் விளக்கு எரிந்து சுபிட்சம் உண்டாகும்.
எதிரணியினர் பேச்சை கேட்டு நன்றி மறந்தவர்களாக இருக்க வேண்டாம். எனவே, உங்கள் ஓட்டை விசுவநாதனுக்கு (அ.தி.மு.க., வேட்பாளர்) போடுங்கள்’’ என்றார்.
வடிவேலுவின் இந்த பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.   திமுகவினர் ஆவேசமடைந்து  சப்தம் போட்டதால், சுதாரித்துக்கொண்ட வடிவேலு,க.விஜயனுக்கு ஓட்டுப் போடுங்கள் என மாற்றி கூறினார்.
வடிவேலுவின் பேச்சால் கூட்டத்திற்கு வந்த திமுக தொண்டர்கள் குழப்பமடைந்தனர்.

Wednesday, April 6, 2011

ஒரு கொலைகாரனுக்கு திரும்பத் திரும்ப சிவப்புக் கம்பள வரவேற்பு ஏன்?

ங்குள்ள தமிழரை இந்தியராக இந்த நாடு மதிக்கவே இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது சோனியா காந்தி – மன்மோன் சிங்கின் மத்திய அரசு!
இலங்கையில் நடந்த தமிழின அழிப்பைப் பார்த்து உலகமே ராஜபக்சேவை கொலைகாரன் என்றும், இனப் படுகொலைக்குக் காரணமானவன் என்றும், போர்க்குற்றவாளி என்றும் முத்திரைக் குத்தி வரும் நேரத்தில், அந்தக் கொலைகாரனை தாங்கிப் பிடித்து, சம அந்தஸ்து வழங்குவதில் மும்முரம் காட்டுகிறது மத்திய அரசு.
இந்தியாவில் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் அழைப்பு போவது, தமிழர் பிணங்களின் மீது நின்று எக்காளமிட்ட இந்த கொலைகாரனுக்குத்தான். இங்குள்ள தலைவர்களோ இன உணர்வாளர்களோ எழுப்பும் கூக்குரலை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை மன்மோகன் அரசு.
ராஜபக்சேவும் இந்திய அரசின் மனநிலையைப் புரிந்து கொண்டு, முடிந்தவரை தமிழரையும் தமிழர் தலைவர்களையும் அசிங்கப்படுத்துவதில் குறியாக உள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்த இலங்கை சென்னை இந்திய பாராளுமன்றத்தின் உறுப்பினரும் ஒரு பெரிய கட்சியின் தலைவருமான திருமாவளவனை (அவர் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகளை நாம் வைத்தாலும் கூட) கொழும்பு விமான நிலையத்தில் கால்வைக்கக் கூட அனுமதிக்காமல் அவமதித்துத் திருப்பி அனுப்பிய இனவெறியனான ராஜபக்சேவை, அடுத்த ஒரே மாதத்தில் ரத்தினக் கம்பள வரவேற்பு கொடுக்க அழைக்கிறது மத்திய அரசு. அதுவும் ஏதோ தலைபோகிற அரசியல் காரியத்துக்கல்ல… வர்த்தக ஒப்பந்தப் பேச்சுக்கல்ல… ஏற்கெனவே வெற்றி தோல்வி நிச்சயக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் ஆட்டத்தைக் கண்டு களிக்க.. விவஸ்தை கெட்ட ஜென்மங்கள்!
அவனும் வெட்கமே இல்லாமல் இந்தியாவுக்கு வந்து, சென்னையில் இறங்கி அங்கிருந்து திருப்பதிக்கு மகா பாதுகாப்புடன் போய், வெங்கடாஜலபதியிடம் ‘இலங்கை ஜெயிக்க வேண்டும்; இந்திய அணி தோற்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து கொண்டு… அடப்பாவிகளா, என்னதான் நடக்கிறது இந்த நாட்டில்?
சென்னையில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் என அத்தனை கிரிமினல் வேலைகளையும் செய்த, தேடப்படும் குற்றவாளியாக இந்திய நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா என்ற கிரிமினல், சகல பாதுகாப்பு மரியாதைகளுடன் இந்திய பிரதமர் வீட்டில் அவருடன் விருந்துண்டு மகிழ்கிறான்; பல்லாயிரம் தமிழர்களைக் கொன்ற, உலகத்தால் கொலைகாரன் என்று முத்திரை குத்தப்பட்ட ராஜபக்சே, முதல் மரியாதைக்குரியவனாக தமிழகத்திலும் இந்தியாவிலும் நடமாடுகிறான்… ஆனால், இந்த மண்ணின் மைந்தர்கள், இழந்த தம் உறவுகளுக்காக மனம் வெதும்பி குரல் கொடுத்தால் சிறைவாசமா?
என்ன சாதிக்க நினைக்கிறது இந்தியா?
‘எங்கள் ஆதரவுடன் நடந்த தமிழர் அழிப்பு நடவடிக்கையைச் செய்து முடித்த ராஜபக்சேவை யாரும் இனி போர்க்குற்றவாளி என்று சொல்லக் கூடாது. இந்தியாவின் சமமான நண்பன், தமிழர் இன அழிப்பு என்பது இந்தியாவின் அறிவிக்கப்படாத வெளியுறவுக் கொள்கைகளில் ஒன்று’, என்றா?
ஒரு சினிமா விழாவுக்கு தடையை மீறிப் போன நடிகையை புறக்கணிப்போம் என்று சொல்லும் ரோசக்காரர்களே… யோசித்துப் பாருங்கள்… அதே இலங்கையின் ராஜபக்சேவை இங்கழைத்து கூடிக் குலவுகிறது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. இவர்களை என்ன செய்யலாம்… எப்படி தண்டிக்கப் போகிறோம்?
ராஜபக்சே இந்தியாவுக்கு வந்தால் தமிழர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று தெரிந்தும், வெட்டுக்காயத்தில் உப்பை வைத்துத் தேய்த்துத் திருப்திப்படும் குரூர புத்தி கொண்ட காங்கிரஸ் ஆட்சியாளர்களை ஓட ஓடத் துரத்த முன்பு வாய்த்த சந்தர்ப்பத்தைத்தான் தெரிந்தே நழுவ விட்டோம். இந்த முறை, மீண்டும் ஒரு சிறிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.
தமிழ் மண்ணில் காங்கிரஸ் என்ற கட்சி முன்பு இருந்தது என்று சொல்லும் நிலையை இந்தத் தேர்தலில் ஏற்படுத்துவதுதான், இந்த அவமானங்களிலிருந்து தமிழர்கள் கொஞ்சமாவது தலைநிமிர வழி! அடுத்த முறை கொலைகாரன் ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைக்கும் முன் தமிழர்கள் மனநிலை என்ன என்றாவது மத்திய ஆட்சியாளர்கள் யோசிக்க இந்த ஆயுதம் சற்றேனும் உதவக்கூடும்!
குறிப்பு: இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எந்த அளவுக்கு ராஜபக்சேவுடன் இணக்கமாக உள்ளனர், கூடிக் குலாவி விருந்துண்ணுகின்றனர், தமிழர் பகுதிகளில் ராஜபக்சே அரசியல் வெற்றிகள் பெற உதவுகின்றனர்…  இங்குள்ளவர்கள் எதிர்த்து என்ன பயன் என்ற கேள்விகளை சிலர் எழுப்பலாம்.
தலைவர்கள் எல்லாம் தமிழர் ஆகிவிட முடியாது. டக்ளஸ்கள், கருணாக்கள் வழியில் இன்னும் எக்கச்சக்கமாய் பிழைப்புவாதிகள் அங்கே உருவாகியிருக்கலாம். ஆனால் ராணுவத்திடம் சின்னா பின்னமாகி சிதைந்த தமிழ்ச் சொந்தங்கள் நம்பியது இங்குள்ள தமிழ் உறவுகளைத்தான். அந்த உணர்வுக்கு தரும் மரியாதை, தமிழர் இன அழிப்புக்கு துணை நின்ற காங்கிரஸை புறக்கணிப்பது… ஆம்… காங்கிரஸை மட்டும். தமிழர் அரசியலில் இனி காங்கிரசுக்கு இடமில்லை என்ற நிலைதான் முக்கியம்!  எனவே நம் உறவுகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையைச் செய்வோம்!

லண்டன் வன்முறைச் சம்பவம்!- மக்களை விழிப்பாக இருக்குமாறு தகவல்துறை அமைச்சகம் வேண்டுகோள்

புலம்பெயர் நாடுளில் தமிழர்கள் மத்தியில் இடம்பெற்றுவருகின்ற வன்முறைச் சம்பவங்களை, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துகின்ற ஓர் ஆயுதமாக பயன்படுத்துகின்ற சிறிலங்கா அரசின் பிரசாரங்களுக்கு, வலுவூட்டுகின்ற வகையில் தமிழர்களின் செயற்பாடுகள் அமையக்கூடாதென....
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் நாதம் ஊடக சேவையூடாக தெரிவித்துள்ளார்.
விடுதலைக்கான செயற்பாட்டுத் தளத்தில், லண்டனில் நீண்டகாலமாக இயங்கி வந்துள்ள திரு.தனம் என அழைக்கப்படும் சூசைப்பிள்ளை மீது நடாத்தப்பட்ட வன்முறைச் சம்பவம் குறித்து நாதம் ஊடக சேவைக்கு கருத்துரைத்த பொழுதே இதனை தெரிவித்துள்ளார்.
கருத்து முரண்பாடுகள் இத்தகைய வன்முறைகளாக தோற்றம் பெறுவது, ஓரு ஆரோக்கியமான விடுதலைப் பண்பாடாக அமையாதென தெரிவித்துள்ளதோடு, இச்சம்பவத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது திட்டமிட்டு திசை திருப்பிவிடும் சில ஊடகங்களின் செயற்பாடுகளையும்; வன்மையாக கண்டித்துள்ளார்.
இதேவேளை இத்தகைய திசைதிருப்பும் செய்திகள் தொடர்பில் குறித்த ஊடகத்தரப்பினருக்கு தனது கண்டனத்தை தெரியப்படுத்த இருப்பதாகவும் தனக்கு ஏற்பட்ட சம்பவத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நோக்கி திசை திருப்பி விடுகின்றமை கவலையளிப்பதாகவும் திரு.தனம் அவர்கள் நேரடியாகவே தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் அவசரகதியில் இவ்வாறு திசைதிருப்பும் செய்திகளை பரப்பிவரும் விசமிகள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்குமாறு தகவல்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாதம் ஊடக சேவை
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இராமேஸ்வர மீனவர்கள் 4 பேரை காணவில்லை! இலங்கை கடற்படை மீது சந்தேகம்- வைகோ

இராமேஸ்வர மீனவர்கள் 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும், இலங்கைக் கடற்படையினர்தான், அந்தப் படகை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என இராமேசுவரம் மீனவர்கள் கருதுகிறார்கள் என்றும் மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார்.
காணாமல் போயுள்ள, 4 மீனவர்களையும் மீட்குமாறு கோரி வைகோ, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வைகோ எழுதியுள்ள கடிதித்தில்,
இராமேசுவரத்தைச் சேர்ந்த அந்தோனி என்பவருக்குச் சொந்தமான மீன்பிடிப் படகில் விக்டஸ், அந்தோனி, ஜான் பால், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த 2 ம் தேதி அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்றனர்.
ஒரு நாள் பயணத்துக்கு மட்டுமே அவர்களிடம் பெற்றோல் இருந்துள்ளது. எனவே, மறுநாள் 3 ம் தேதி அதிகாலைக்கு உள்ளாக அவர்கள் திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் அவர்கள் திரும்பி வரவில்லை. அந்தப் பகுதி மீனவர்கள் கடலில் சென்று தேடியபோது, அவர்கள் சென்ற படகையும் காணவில்லை.
அந்தப் பகுதியில் இலங்கை கடற்படையினரின் நடமாட்டத்தை இதர மீனவர்கள் பார்த்துள்ளனர்.
எனவே, இலங்கைக் கடற்படையினர்தான், அந்தப் படகை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என இராமேசுவரம் மீனவர்கள் கருதுகிறார்கள்.
கடத்திச் செல்லப்பட்ட மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் எவ்வித ஆபத்தும் இன்றி அவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது கடிதத்தில் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

மாற்று அரசியலை தேடி கடலென திரண்ட கரூர் மக்கள்.

“காங்கிரசின் வீழ்ச்சி என்பதே தமிழினத்தின் எழுச்சி” என்ற லட்சியத்தை மனதில் கொண்டு இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினரும் அதன் தலைமை ஒருங்கினைப்பபாளர் செந்தமிழன் சீமான் அவர்களும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சிக்கு எதிரான பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் பிரச்சாரத்தின் 11- வது நாளான நேற்று திருப்பூர்,வெள்ளகோவில்,கரூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டகரூர் பொதுக்கூட்டத்தில் பெண்களும் குழந்தைகளும் மிகுந்த அளவில் கலந்து கொண்டனர். அக் கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் பேசும்போது 63 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி செய்து வருகிறது. இந்த தேசத்தில் நடைபெற்ற ஊழல். கொள்ளை,கொலை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, அடிப்படை சுகாதார வசதி இல்லாத அவல நிலை இவை அனைத்திற்குமே காரணம் காங்கிரஸ் கட்சி. தமிழர்களின் மற்றுமொரு தாயகமான தமிழீழ மண்ணில் 60 ஆண்டு காலமாக நடந்து வந்த விடுதலை போராட்டத்தை வீழ்த்திய கட்சி காங்கிரஸ். தமிழர்களின் நலனில் துளியும் அக்கறையில்லாத காங்கிரஸ் கட்சிக்கு பிறகு எதுக்கு என் வாக்கு? காங்கிரஸ் கட்சிக்கு நாம் வாக்கு செலுத்தி செலுத்தியே நம் தமிழினத்துக்கு வாய்க்கரிசி போட வைத்துவிட்டோம்.
இந்த நாட்டில் காங்கிரஸ் கட்சி மக்களுக்காக மேற்கொண்ட ஒரு போராட்டம் ஏதேனும் உண்டா? ஒரு நன்மை பயக்கும் தொலைநோக்கான வளர்ச்சி திட்டம் ஏதும் உண்டா? காங்கிரசிற்கு வாக்கு கேட்கும் யாராவது இதை பற்றி என்னுடன் பேச தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். தமிழக மீனவர் படுகொலை தடுத்து நிறுத்துங்கள், காவிரியில் தண்ணீர் பெற்று தாருங்கள்,மீனவர் படுகொலையை தடுக்க கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும் என்று சொல்லி ஏதேனும் ஒரு போராட்டத்தை ஒரு அறிக்கையை இந்த மண்ணில் காங்கிரஸ் கட்சி வெளியிடிருக்கிறதா என்று தன முன்னே திரண்டிருந்த மக்களிடையே கேள்வி எழுப்பினார். நாட்டுக்காக வீட்டை கொடுத்தோம் என்று சொல்லிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர், அந்த ஒரு வீட்டுக்காக ஐம்பது வருடம் இந்த நாட்டையே எடுத்துவிட்டார்கள்.
சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பட்டியலை வெளியிட முடியாது என்றும் அதை வெளியிட்டால் பிரச்னை வரும் என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. உலகத்தில் உள்ள சிறந்த அயோக்கியர்களை கணக்கெடுத்தால் காங்கிரசில் இருக்கும் அனைவரும் அந்த பட்டியலில் வருவார்கள் என்று தெரிவித்தார். பகுத்தறிவு பகலவனின் வாரிசு என்றும், அண்ணாவின் தம்பி என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி அந்த இருபெரும் தலைவர்களின் கனவு காங்கிரஸ் கட்சியை ஒழிப்பது என்பதுதான்.ஆனால் அதை விடுத்து இன்று காங்கிரஸ் கட்சிக்கு வால் பிடித்துகொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி இந்த மண்ணில் இருக்கும் வரை இந்திய வல்லரசாக முடியாது என்று தெரிவித்தார்.
கரூரில் திரண்டு இருந்த மக்கள் கூட்டம் இப் பொதுக்கூட்டத்தை மாநாடு போல் காட்சி அளிக்க செய்தது. திரண்டு இருந்த மக்கள் கூட்டம் நாம் தமிழர் கட்சியை ஒரு மாற்று அரசியல் சக்தியாகவே கருதுகிறது என்பதை கூடி இருந்த பெண்கள், குழந்தைகள், இளைஞர்களின் கூட்டம் உறுதி செய்தது.


































ebook