http://www.tamilwin.com/photos/full/2011/02/DSC_0720.JPGபார்வதியம்மாள் இறுதி நிகழ்வு : திருமாவளவனை திருப்பி அனுப்பியது இலங்கை அரசு. வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வில் பங்குகொள்வதற்கென தமிழ் நாட்டில் இருந்து வந்த விடுதலைச்சிறுத்ததைகள் கட்சியின் பொதுச் செயலர் தொல்.திருமாவளன் இலங்கை அரசினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். நேற்று முன்னாள் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் உயிரிழந்த பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வு இன்று தீருவிலில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கு கொள்ளவென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் தொல்.திருமாவளவனும் கட்சியின் உறுப்பினர்கள் இருவரும் கடந்த இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பைச் சென்றடைந்தனர். கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவர்களை வழிமறித்த விமானப்படை அதிகாரிகள் அவரை தொடர்ந்து செல்ல அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்திருக்கின்றனர். அதற்கான காரணம் என்ன? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியபோது இது தொடர்பிலான முடிவு அரச உயர் மட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றமையால் என்ன காரணம் என்று தெரியாது என்றும் யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் விமானப் படை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதனை அடுத்து திருமாவளவனும் அவரது சகாக்களும் நாடு திரும்பியதாக சென்னையில் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளார்கள் என்கிற தகவலை தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் உறுதிப்படுத்தினார்.
தொல்.திருமாவளவன் அவர்களைத் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் இன்று (22-02-2011) காலை 10.30 மணியளவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையேற்றார். ஆயிரக்கணக்கில் திரண்ட விடுதலைச் சிறுத்தைகளுடன் இலங்கைத் தூதரகத்தை நோக்கிப் பயணமானார்.
அப்போது, வீரவணக்கம் வீரவணக்கம் அன்னை பார்வதி அம்மாளுக்கு வீரவணக்கம்! அப்புறப்படுத்து அப்புறப்படுத்து சிங்களத் தூதரகத்தை அப்புறப்படுத்து! அவமானம் அவமானம் இந்தியாவுக்கு அவமானம்! ஆகிய முழக்கங்களை எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எழுப்ப, ஆயிரக் கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் உடன் எழுப்பிய சிங்களத் தூதரகத்தின் உள்ளிருப்போரை அதிரச் செய்தது.
இலங்கை கொடியும், ராஜபக்சே உருவப்படமும் எரிக்கப்பட்டன. 1 மணி நேரத்திற்கும் மேலாக எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். சாலையிலேயே அன்னை பார்வதி அம்மாள் திருவுருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை அரணை மீறி தூதரகத்திற்கு உள்ளே முயன்ற எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களையும் ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகளையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
செவ்வாய்க்கிழமை, காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை தீருவில் மாவீரர் சதுக்கத்திலே அஞ்சலி நிகழ்வுகள், நினைவு உரைகள் இடம்பெறும். தொடர்ந்து 12 மணியளவிலே பூதவுடல் அவருடைய புதல்வியின் இல்லத்திற்கு, அதாவது பார்வதி அம்மாள் வாழ்ந்த வீட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவில் இருக்கக்கூடிய வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சமயக் கிரியைகள் நடத்தப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவிலே இறுதி ஊர்வலம் ஆரம்பமாகும். அது பிற்பகல் 4 மணியளவிலே வல்வெட்டித்துறை ஊரணி பொதுமயானத்தை சென்றடைய உள்ளது.