Sunday, February 20, 2011

தமிழீழ தேசிய தலைவரின் தாயார் காலமானார்

தமிழீழ தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதிப்பிள்ளை(பார்வதியம்மா) அவர்கள் இன்று காலை காலமானார் என்பதை மிகமன வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்.
கடந்த பல மாதங்களாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழீழத்தாய் இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமானார்.
வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.
கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர்  மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவரை இந்திய அரசு சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அவர் வந்த விமானத்திலேயே மலேசியாவிற்கே திருப்பியனுப்பியது.
பின்னர் இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையிலேயே கிகிச்சையளிக்க முன்வந்த போதில் அவரது குடும்பத்தினர் அதற்கு உடன்படாமையாலும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் விரும்பவில்லை.
இதனால், பார்வதி அம்மாள்,  அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச் அழைத்து செல்லப்பட்டார்.    அங்கு அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  
அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சற்று உடல் நலம் தேறிய அவர் மீண்டும் வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார்.  அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. 
கடந்த சில வாரங்களாக அவர் சுய நினைவை இழந்து அவதியுற்றார்.   இந்நிலையில்   வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று காலமானார்.
ஈழத்தாயின் பூவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அளவில் ஈழமக்களின் அஞ்சலிக்குப்பின்னர் விதைக்கப்படலாம் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 
ஈழத் தமிழினத்தை அடிமைத் தளையிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அத்தாயை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment

ebook