Monday, April 11, 2011

இது எங்கள் மரபணுவில் உள்ள கோபம் :சீமான்

நாம் தமிழர் இயக்கம் சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சீமான் பேசினார்.
அவர், ‘’காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை தோற்கடிக்கும் லட்சிய உணர்வில் போராடி வருகிறோம்.
இது எங்கள் மரபணுவில் உள்ள கோபம். ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரதத்திற்கு கிடைத்த ஆதரவு மூலம் இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக இருப்பதை காண முடிகிறது.
இதுவரை தேர்தல் தேதியை மட்டும் அறிவித்து விட்டு செல்வதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலையாக இருந்தது. ஆனால் இந்தமுறை தேர்தல் ஆணையம் பணத்தை கொடுக்க வில்லை. இப்போதுள்ள இதே நேர்மை, உண்மை மே13-ந் தேதி வரை தொடர வேண்டும்.
108 ஆம்புலன்ஸ், குப்பை லாரி, சேட்டு, மார்வாடி மூலம் பணம் கொடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர். அது உங்கள் பணம், அதை வாங்கி கொள்ளுங்கள், ஆனால் உங்களிடம் பணம் கொடுப்பவர்களின் கையை பிடித்து கேளுங்கள் இந்த பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று. 63 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து வரலாற்றில் பதியவைக்கும் மிகப்பெரிய வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் இத்தேர்தலில் எழுதப்போகும் தீர்ப்பை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. உலகில் சின்னஞ்சிறு நாடுகள் கூட தடையில்லா மின்சாரத்தை அளிக்கும் போது தமிழ்நாட்டில் மின்சாரமின்றி இருளில் இருக்கும் நிலை உள்ளது. காங்கிரஸ் அரசின் சாதனையே நாட்டை ஊழலில் தலைசிறந்த நாடாக மாற்றியது தான்’’ என்று பேசினார்.

தங்கபாலு மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறார்: இளைஞர் காங்கிரஸ் புகார்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் மயிலை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.விஜயசேகர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலு, அப்பாவி வாக்காளர்களை கண்டறிந்து ஓட்டுக்கு தலா ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விநியோகம் செய்துள்ளதாக அந்த தொகுதி மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
மேலும், தொகுதியில் உள்ள ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு தலா ரூ.500 வீதம் பணப்பட்டுவாடா செய்யவும் திட்டமிட்டு அதற்காக ஆட்களை அமர்த்தியுள்ளார். இதன்மூலம் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ.5 கோடி வரை ஒதுக்க திட்டமிட்டு இருக்கிறார்.
ராகுல்காந்தி கொள்கைக்கு மாறாகவும், நேர்மையான வழிகாட்டுதலுக்கு எதிராகவும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள தங்கபாலுவை வன்மையாக கண்டிக்கிறேன். மைலாப்பூர் தொகுதியில் தேர்தல் நேர்மையாக நடைபெற தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

72 முறை குருதி கொடுத்த பெரியார் தொண்டர் : மதுரை வரதராஜன்

”தானத்தில் சிறந்தது ரத்த தானம்” என்பார்கள். அந்த ரத்த தானத்தை வாழ்வின் லட்சியமாகவே நிறைவேற்றி வருகிறார்கள் மதுரை வரதராஜன் – அமுதுரஜினி தம்பதி.  ஏழைக் குழந்தைகளின் சிகிச்சைக்கு, வரதராஜன் மட்டும் இதுவரை 72 முறை ரத்தம் வழங்கியுள்ளார்.
தனது துணைவியாரையும் ரத்தம் வழங்க வைத்து ஏழை நோயாளிகளின் உயிர் பிழைக்க உதவி வருகிறார். இத்தனைக்கும் வரதராஜனுக்கு “ஏ’ நெகட்டிவ் எனும் அரியவகை ரத்தம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது சேவையைப் பாராட்டி, “நெஞ்சம் கலந்த நேயர்’ உள்ளிட்ட பல விருதுகளும் அளிக்கப்பட்டுள்ளன. ரத்த தானச் சேவையுடன் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் மூலம் மாதந்தோறும் இலக்கியக் கூட்டம் என இதுவரை ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளையும் நடத்திவரும் அந்தத் தம்பதியரை மதுரை மேலமாசி வீதியில் உள்ள மணியம்மை மழலையர் பள்ளியில் சந்தித்துப் பேசினோம்.
எப்போதிருந்து ரத்த தானம், இலக்கிய சேவையில் ஈடுபட்டு வருகிறீர்கள்?
மழலையர் பள்ளியைக் கடந்த 25 ஆண்டுகளாக நடத்திவருகிறேன். நான் சாதி மறுப்பு திருமணம் செய்தவன். சமூகச் சீர்திருத்தத்தை மனதில் வைத்து சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டுவருகிறேன். எனினும், தமிழ் மொழிக்கும், அதன் இலக்கியத்துக்கும் அயராது பாடுபடவேண்டும் என மாதந்தோறும் இலக்கியக் கூட்டத்தையும் நடத்திவருகிறேன். தமிழண்ணல், இளங்குமரனார் என தமிழ் அறிஞர்கள் துணையோடு தமிழ் இலக்கியத்தை இளந்தலைமுறையினருக்கு கொண்டுசெல்வதே எனது கூட்டத்தின் நோக்கம்.
இதற்கிடையில்தான் ஏழை எளியோருக்கு ரத்த தானம் வழங்கிவருகிறேன். அதாவது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு மட்டும்தான் ரத்தம் வழங்குவது என்ற குறிக்கோளுடன் இதுவரை 72 முறை ரத்தம் வழங்கியுள்ளேன்.
எப்போது ரத்தம் வழங்க ஆரம்பித்தீர்கள்? உங்கள் துணைவியாரையும் இதில் ஈடுபடுத்தியது எப்படி?
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நான் எனது பிறந்த நாளுக்காக பிறருக்கு என்னால் ஆன உதவியைச் செய்ய நினைத்திருந்தேன். அப்போது அரசு மருத்துவமனையில் ஏழை குழந்தை சிகிச்சைக்கு அரியவகை ரத்தமான ஏ நெகட்டிவ் தேவைப்படுவதாக அறிந்து முதலில் வழங்கினேன். பின்னர், நோயாளிகளுக்குத் தேவைப்படும்போதெல்லாம் ரத்தம் வழங்கலாமே என நானும் துணைவியாரும் பேசினோம். அதனடிப்படையில்தான் பெரியார் குருதிக் கழகம் அமைத்து ஆண்டுக்கு சுமார் 600 பேரையாவது ரத்தம் வழங்க வைக்கிறோம்.
எங்களது ரத்த தானக் கழகம் மூலம் அரசு மருத்துவமனைக்கு மட்டுமே ரத்தம் வழங்கிவருகிறோம். ஆனால், சில நேரம் தவிர்க்கமுடியாத காரணங்களால் தனியார் மருத்துவமனைகளும் எங்களிடம் ரத்தம் கேட்பதால், நோயாளிகள் நலன் கருதி இலவசமாகவே அவர்களுக்கும் ரத்தம் வழங்குகிறோம்.
நாங்கள் காதல் திருமணம் செய்தவர்கள். எனது துணைவியார் அமுதுரஜினியும் அவ்வப்போது ரத்தம் வழங்கிவருகிறார். அதிக முறை ரத்தம் வழங்கியதற்காகவும், அதிகமானோரை ரத்தம் வழங்கச் செய்தமைக்காகவும் மதுரை மாவட்ட அளவில் சிறந்த ரத்த தான தொண்டருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரத்த தானம் தவிர வேறு என்ன சேவையில் ஈடுபடுகிறீர்கள்?
குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் பல நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஆகவே குழந்தைகளுக்கான ஹீமோகுளோபின் அளவைக் கண்டறியும் மருத்துவ முகாம் ஆங்காங்கே நடத்தப்படுகிறது. அப்படி ஹீமோகுளோபின் குறைந்திருக்கும் குழந்தைகளுக்கு அதைச் சரிசெய்யும் மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறோம்.   நாங்கள் நடத்தும் மணியம்மை மழலையர் பள்ளியில் சிறுவர், சிறுமியருக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கற்றுத் தருகிறோம். மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளுக்கு இலவசமாகவே கல்வி கற்றுத் தரப்படுகிறது.
எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் திண்ணைப் பள்ளிக்கூட ஒழுக்கத்தையும், இருபத்தோராம் நூற்றாண்டு கல்வி அறிவையும் பெறும் வகையில்தான் கற்பிக்கப்படுகிறது. மேலும், இசை பயிற்சி முகாமையும் கோடை விடுமுறை நாள்களில் நடத்திவருகிறோம். அதில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு சான்றிதழைப் பெற்றுவருகிறார்கள்.
நீங்கள் பெரியார் கொள்கையில் தீவிர ஈடுபாடு உடையவராக இருந்தும் பக்தி இலக்கியக் கூட்டங்களை அதிகம் நடத்துகிறீர்களே?
தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியங்கள் முக்கியமானவை. நாட்டில் மனச்சாட்சியும், நம்பிக்கையும் முக்கியம். அப்படிப் பார்த்தால் எங்கள் ஊர் கோயில் நகைகளை எனது பொறுப்பில் வைப்பதைத்தான் எங்கள் பகுதி மக்கள் விரும்புகிறார்கள். பெரியார் பிறந்த தினத்துக்குக்கூட நான் பெரியபுராண வரிகளை வைத்தே வாழ்த்தி போஸ்டர் ஒட்டுகிறேன். தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் இளந்தலைமுறையினரின் பங்கு மிகவும் குறைந்துவருகிறது. அதற்காகவே மாதந்தோறும் இலக்கியக் கூட்டத்தையும் நடத்திவருகிறேன்.
கட்டுப்பாடு, ஒழுக்கம், மனிதநேய அதனடிப்படையில் கற்பிக்கப்படும் கல்வியே சமூகத்துக்கு நன்மை பயக்கும். இதை மையமாக வைத்தே ரத்த தானம், கல்வி நிலையம், இலக்கியக் கூட்டங்களை துணைவியாரோடு சேர்ந்து நடத்திவருகிறேன். இன்னும் சொல்லப்போனால் மக்கள் சேவைக்கு, இல்லறத்தால் இடையூறு ஏற்படக்கூடாது என்ற நோக்கில், குழந்தைகூட பெற்றுக் கொள்ளாமலேயே நானும் எனது துணைவியாரும் பொதுப்பணியில் ஈடுபட்டுவருகிறோம்.

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி

87 வயதாகிவிட்டவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? என்று மக்கள் யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள காங்கிரசை ஆதரிக்க வேண்டுமென ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
கேரளத்திலும் தமிழகத்தைப் போல வரும் 13-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக ராகுல்காந்தி, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
கொச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசும்போது,   ‘’சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வென்றால், அடுத்த தேர்தலின் போது 93 வயதாகும் முதியவர் (வி.எஸ். அச்சுதானந்தன்) உங்கள் முதல்வராக இருப்பார். இந்த நிலைமை உங்களுக்கு வேண்டுமா?
காங்கிரஸுக்கு வாக்களித்தால், இளைஞர்களும், அதே நேரத்தில் அரசியலில் அனுபவம் மிக்கவர்களும் சமஅளவில் சட்டப் பேரவைக்குச் செல்வர். இளமைக்கு உரிய துடிப்புடனும், அனுவத்துக்கு ஏற்ற விவேகத்துடனும் ஆட்சி நடைபெறும்.
கேரள அரசியலில் இப்போது வன்முறை அதிகரித்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின் இதற்கு முடிவு கட்டப்படும். கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில்தான் வன்முறை அதிகரித்துள்ளது.
காந்திய வழியில் வந்த காங்கிரசார் எப்போதும் அமைதியை விரும்புபவர்கள். எனவே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வர மக்கள் வாக்களிக்க வேண்டும்’’என்று ராகுல் காந்தி பேசினார்.

ebook