சீமான்

திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற தமிழர் தேசிய திருவிழா.
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் “தமிழர் தேசிய திருவிழா” சனவரி 17-ஆம் தேதி இனிதே கொண்டாடப்பட்டது. ஊரெங்கும் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டு, தானி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக காலை 9 மணி முதலே சிறுவர்களும், சிறுமியர்களும், பெண்களும் T.E.L.C மைதானம் நோக்கி வரத்தொடங்கிவிடார்கள்.
ஓட்டபந்தயம், கயிறு இழுத்தல், எலுமிச்சை கரண்டி, பானை உடைத்தல், இசை நாற்காலி மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றன. அனைத்து போட்டிகளையும் இரு உடல் பயிற்சி ஆசிரியர்கள் நடத்த, விழா கமிட்டியை சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் அவற்றை சிறப்பாக ஒருங்கினைத்தார்கள். வந்திருந்த அனைவருக்கும் இலவசமாக குருதி பரிசோதனை செய்து அவர்களின் குருதி பிரிவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. குருதிகொடைக்கு விருப்பமுள்ளவர்களின் பெயர் பெறப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது.
5 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் திருவள்ளூர்-இல் உள்ள MGR சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மைதானம் வந்தடைந்தார். இவருடன் தலைமை செயலர் திரு.தடா ராசா மற்றும் குடும்பத்தினர், இயக்குனர் செல்வபாரதி, சென்னை தெற்கு ஒருங்கிணைப்பாளர் திரு.தங்கராசு
வேளச்சேரி பகுதி ஒருங்கிணைப்பாளர் தமிழ் தேவன் மற்றும் பலர் வந்து சேர்ந்தனர். இவர்களை திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அழகிரி, அதிகத்தூர் தலைவர் சிதம்பரநாதன், ஆகாச குமார், மகேந்திரன், ரமேஷ், லோகநாதன், லிங்கேஸ்வரன், பசுபதி, ராஜ்குமார், சென்னை வடக்கு ஆனந்தராஜ், உள்ளிட்டோர் வரவேற்று அழைத்து சென்றனர். இவர்களின் முன்னிலையில் கபடி இறுதி போட்டி நடைபெற்றது.
6-மணி அளவில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. திருவள்ளூர் சிலம்பாட்ட குழுவினர் சார்பில் இரு குழுக்கள் சிறப்பாக சிலம்பம் ஆடினார்கள், அது மிக எழுச்சியாகவும், வீரம் செறிந்ததாகவும் இருந்ததை காண முடிந்தது.
பிறகு பறை குழுவினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. எழுச்சி மிக்க பாரம்பரிய பறை முழக்கத்திநூடே அவர்கள் நிகழ்திக்காட்டிய தமிழர் வாழ்வு முறையும், அங்கே சூறாவளியாக வந்த ராஜபக்சேவும், அவர்களுக்கு உதவிய இந்தியாவும், அந்த போரும், துயரமும், மேலும் “விழ விழ எழுவோம்” என்ற எழுச்சி காட்சிகளும் பார்ப்போர் மனதை பாதிக்காமல் இருக்காது.
அதை தொடர்ந்து “மால் கொம்பு” என்ற பழமையான தமிழ் கலை, இப்பொழுது மகாராஷ்ட்ராவில் மட்டுமே உள்ள கலை இங்கே நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. நம் தம்பிகளின் வீரமும், ஒருங்கிணைப்பும் இதன் ஊடே வெளிப்பட்டது.
கலை நிகழ்வுகள் நிறைவு பெற்றபின் திரு.தடா ராசா அவர்கள் முன்னிலையில், மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து நாம் தமிழரின் உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது. பிறகு அழகிரி அவர்கள் வரவேற்புரை வழங்க, திரு.தங்கராசு, திரு.சிதம்பரநாதன், இயக்குனர் செல்வபாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். சென்னை வடக்கு நாம் தமிழரை சேர்ந்த ஆனந்தராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
திரு.சீமான் அவர்கள் சிறப்புரை வழங்கினார். அவர் தமிழ் மொழியின் அவசியத்தை, கலப்படமில்லாமல் தமிழ் பேசவேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி பேசினார். பிறகு எப்படி சினிமா வந்து நமது பாரம்பரிய கலைகளை அழித்துகொண்டிருகிறதோ, அப்படியே கிரிக்கெட் வந்து நமது கலாச்சார வீர விளையாட்டுக்களான கபடி, சிலம்பம், மால்கொம்பு, போன்ற விளையாட்டுகளை அழித்து கொண்டிருக்கிறது. அந்த அழிவிலிருந்து போராடும் இந்த கலைஞர்களை நாம் ஆதரித்து பேணவேண்டும் என்றும் கூறினார். மேலும் அரசியல் என்பது வேறு அல்ல வீட்டு நிர்வாகம் என்பது வேறு அல்ல, வீட்டு நிர்வாகமே ஒரு உயரிய மட்டத்தில் செய்யும் பொழுது அது நாட்டு நிர்வாகம் ஆகின்றது என்றார். ஆகவே எதற்காக நாம் ஒதுங்கி இருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.. அப்படி ஒதுங்கி இருப்பதால் தான் கயவர்கள் உள்ளே வந்து விடுகிறார்கள் என்றார். நாட்டின் எதிர்காலமான மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழுமியிருந்த கூட்டத்தில் அவர் பேச்சு சிறந்த வரவேற்பை பெற்றது என்பதை அங்கே எழுந்துகொண்டிருந்த கரவொலி நிரூபித்தது.
சிறப்புரை முடிந்த பிறகு பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ் வெற்றிபெற்றவர்கள் மற்றும் பங்கு பெற்றவர்களுக்கு திரு.சீமான் அவர்களால் வழங்கப்பட்டது.
நன்றியுரை வழங்கி திரு.ரமேஷ் அவர்கள் பேசினார். கடந்த இரண்டு நாட்களாக சோர்வின்றி உழைத்த விழா குழுவினரின் பெருமுயற்சி ஒரு சிறப்பான வெற்றியை அவர்களுக்கு ஈட்டி தந்தது.
இறுதியாக பறைகுழுவினர் எங்களுக்கு பாடவும் தெரியும் என்பதை நிரூபித்து “தமிழா தமிழா ஒன்றுபடு, தமிழா தமிழால் ஒன்றுபடு” என்ற பாடலை இசைத்து பாடினர். இதில் சீமான் மற்றும் கூட்டத்தினரும் கலந்து கொண்டது மிக எழுச்சியாக அமைந்தது.. ஒரு சிறுவன் முத்துக்குமார் பற்றிய பாடலை மழலை குரலில் பாடி நெகிழவைத்தான்.
களைந்து சென்ற மாணவர்கள் “தமிழா தமிழால் ஒன்றுபடு” என்று முனுமுனுத்துகொண்டே சென்றதை பார்த்த பொழுது இந்த நிகழ்ச்சி எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை உணர முடிந்தது.
நிகழ்வுகள் அனைத்தையும் பின்புலமாக இருந்து ஒருங்கிணைத்து கடும் பணி ஆற்றிய வெற்றியரசன், மற்றும் மணிவாசன் கண்களில் நீர் துளிர்ததையும் அங்கே பார்க்க முடிந்தது. ஒரு நிறைவான, பயனுள்ள நிகழ்ச்சி, இனி இது நாம் தமிழரிடையே ஒரு எடுத்துகாட்டு நிகழ்வாகவே பார்க்கப்படும்….
திருவள்ளுரிளிருந்து – செல்வராஜ் முருகையன்…
,

 

 

திருப்பி அடிப்பேன்! - சீமான் சிறையில் எழுதிய அதிரடி தொடர் 

''ஏனடா எரிக்கிறாய் என்றோ,
ஏனடா அடிக்கிறாய் என்றோ
எவனடா கேட்டீர் அவனை?
அடியென அவனுக்குச்
சாட்டை கொடுத்தவனும்
சுடுவென தோட்டா கொடுத்தவனும்
தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.
என்ன கொடுமையடா இது!'' 


நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
நின்றது போதும் தமிழா - உந்தன்
கலைகள் அழிந்து கவலை மிகுந்து
கண்டது போதும் தமிழா - வரிப்
புலிகள் எழுந்து புயலைக் கடந்து
போர்க்களம் ஆடுது தமிழா - இன்னும்
உயிரை நினைந்து உடலைச் சுமந்து
ஓடவா போகிறாய் தமிழா?  


 காக்கைகள் மாநாட்டில்
கண்டனத் தீர்மானம்
பாரதியே...
எப்படிப் பாடினாய்
'காக்கை குருவி
எங்கள் சாதி’ என்று?
எங்களில்
ஒருவர் இறந்தால்
ஊரே கூடி அழுவோம்...
ஊரே இறந்துகிடந்தபோதும்
உங்களில்
ஒருவர்கூட அழவில்லையே...
இனியும்
காக்கை சாதி
எனச் சொல்லி
எங்கள் இனத்தை
களங்கப்படுத்தாதே பாரதியே...


கார்கில் போரில் மடிந்த வீரர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்ததில் ஊழல், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலில் ஏற்றிய காங்கிரஸ்காரர்களே... இப்போது 1.76 லட்சம் கோடிக்கு ஊழல் புரிந்து உலக மகா சாதனையையும் செய்து இருக்கிறீர்களே... ஊழல் செய்வது எப்படி? அவை உலகுக்குத் தெரியும்போது உணர்ச்சியற்ற ஜடமாக இருப்பது எப்படி? விசாரணை என வந்தால், ஆவணங்களைத் தொலைப்பது எப்படி? அப்படியே விசாரணை நடந்தாலும், அதனை இழுத்தடிப்பது எப்படி? ஒரு ஊழலை மறைக்க அதைவிட பெரிய ஊழலைச் செய்வது எப்படி என்கிற வித்தைகளை எல்லாம் இலங்கை அரசுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும் ஊழலில் சாதிக்கவைக்க... காங்கிரஸ் கட்சியின் அமுக்கல் படையை இலங்கைக்கு அனுப்புவதுதானே சரியாக இருக்கும்?!
அதைச் செய்யாமல் ஏனய்யா இன்னமும் எங்களைக் குதறுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்?
தங்களைச் சுற்றி இவ்வளவு அழுக்கு மூட்டைகளை வைத்திருக்கும் உங்களைப் பார்த்து இப்படித்தான் கோஷம் எழுப்பத் தோன்றுகிறது.
சோனியாஜி... மன்மோகன்ஜி... 2ஜி... 3ஜி... அடச்சீ!

 

9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வேலைவாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி.

சனவரி 09.1.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணியளவில் சக்தி காரைக்குடி வளாகம் நல்லி மருத்துவமனை அருகில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் திரு. அ. கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் 8,10,12- ஆம் வகுப்பு ஏழை மாணவ, மாணவிகளுக்கு கணினி பயிற்சி, பெண்களுக்கு இரண்டு முன்று, நாங்கு சக்கர வாகன பயிற்சி, கட்டுமானத்துறையில் மேசன் பயிற்சி, இளைஞர்களுக்கு கனரக வாகனங்கள் ஓட்டுனர் பயிற்சி மற்றும் பணிமனை பயிற்சி கொடுக்ப்பட்டது.

 

 

 தமிழக தமிழனுக்கு சிங்களவன் அளித்த பொங்கல் பரிசு! நேற்று மீனவர் ஒருவர் சுட்டுக்கொலை-சீமான்

 புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று கடலுக்கு ஒரு படகில் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற பொழுது எம் இனத்தை அழித்த சிங்களவனின் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் பாண்டியன் (வயது 19) என்ற மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
இன்னும் வாழ்வின் சுகம் அனுபவியாத தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அந்த உயிர் இன்று நம்மிடம் இல்லை.இதற்கு யார் பொறுப்பு?இதுவரை 540 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் இது போன்ற தாக்குதலைக் கண்டிக்கத் துப்பில்லாதவர்கள் தான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றனர். நம் எல்லைக்குள் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதை இலங்கை கடற்படையினர் முன்னிலும் வேகமாக இப்பொழுது தொடர்கின்றனர்.
இது யார் கொடுத்த தைரியம்? இதனைத் தட்டிக்கேட்ட என்னை அடக்குமுறைச் சட்டமான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவிச் சிறையில் தள்ளினார் கருணாநிதி.ஆனால் சுடப்படுவதற்குக் காரணமான ராஜபக்‌ஷேவுக்கு இரத்தினக் கம்பள வரவேற்பினை கருணாநிதியின் மத்திய அரசு அளித்தது.
தமிழர்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறுகிறார். இப்பொழுது உயிரை இழந்து நிற்கும் பாண்டியன் குடும்பம் எப்படி மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட முடியும்? இதற்கு என்ன பதிலை முதல்வர் வைத்திருக்கிறார்?
ஒட்டு மொத்த இனத்தையும் அழித்தொழித்த சிங்கள இராணுவத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்கிய இந்திய அரசு இப்பொழுது கூட்டுப் பயிற்சிக்கும் ஆயத்தமாகி வருகிறது. இது மீதமுள்ள தமிழனையும் அழிக்கவா?
சிங்களவனால் கொல்லப்பட்ட  எம் மீனவன் பாண்டியனின் உடலில் பாய்ந்த குண்டினை பரிசோதித்துப் பார்த்தால் அது இந்திய இராணுவம் கொடுத்த குண்டாகத்தான் இருக்கும்.தமிழனுக்கு சிங்களவன் அளித்த பொங்கல் பரிசு இந்த துப்பாக்கி தோட்டா ஆகும்.
இவ்வாறு நாட்டின் குடிமகன் உயிரைக் காப்பாற்ற வக்கில்லாத கருணாநிதியும், சிதம்பரமும் பதவியில் இருப்பது வெட்கக்கேடு. இவ்வாறு தொடர்ச்சியாக கொல்லப்படும் மீனவர் பிரச்சனையில் இன்றும் கருணாநிதி கடிதம் எழுதி பிரச்சனையை ஊத்தி மூடப் போகிறாரா?
முதலில் இறந்த பாண்டியன் குடும்பத்திற்கு 10 லட்சம் அளிக்க வேண்டும். இந்தப் பிரச்சனையில் இனி எடுக்கும் தீர்வு நிரந்தர இறுதித் தீர்வாகத்தான் இருக்க வேண்டும்.
சிங்கள இனவெறி கடற்படையின் குண்டுகளுக்கு மேலும் ஒரு தமிழக மீனவர் அநியாயமாக உயிரிழந்துள்ளார். (இரண்டாம் இணைப்பு)
நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பாண்டியன் (20). இவரும், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகன்கள் மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோரும் மீன் பிடிப்பதற்காக புதன்கிழமை காலை ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் விசைப் படகில் சென்றனர்.
இந்திய கடல் எல்லைக்குள் 14 கடல் மைல் தொலைவில் விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த சிங்கள இனவெறி கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் பலத்த குண்டுக் காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் இந்திய கடல் எல்லைக்குள் நடந்தது.
உயிரிழந்த பாண்டியனின் உடலுடன் மற்ற மீனவர்கள் கரைக்கு விரைந்தனர். பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரவியதும் ஜெகதாப்பட்டினமே கடற்கரையில் திரண்டு விட்டது. மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு கிளம்பியது.
அனைத்து மீனவர்களும் பாண்டியனின் உடலுடன் இராமேஸ்வரம்-நாகப்பட்டனம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மறியலில் குதித்தனர். இதனால் இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொலிஸார் விரைந்து வந்து மீனவர்களை சமாதானப்படுத்தினர். பாண்டியன் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
சிங்கள கடற்படையின் இந்த வெறிச் செயலால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மட்டுமல்லால், இராமநாதபுரம், நாகப்பட்டனம் மாவட்ட மீனவர்களும் கடும் அதிர்ச்சியும், கொதிப்பும் அடைந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர கிராமங்களில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிங்கள கடற்படையின் அத்துமீறல்களுக்கும், அநியாய கொலைகளுக்கும் முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. சிங்கள கடற்படை இப்போதெல்லாம் இந்தியப் பகுதிக்குள்ளும் புகுந்து தாக்கி வருகிறது. ஆனால் இதை ஒருமுறை கூட இந்திய கடற்படையோ அல்லது கடலோரக் காவல் படையோ தடுத்ததில்லை. ஒரு முறை கூட இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து இந்தியப் படைகள், இந்திய மீனவர்களைக் காத்ததில்லை.
இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் இரத்தத்தைக் குடித்து விட்டது இலங்கைக் கடற்படை. ஆனாலும் கடலுக்குள்ளேயே போக முடியாத அளவுக்கு தொடர்ந்து இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து தங்களைக் காப்பாற்ற ஒரு நாதியும் இல்லாத நிலையில் தமிழக மீனவர்கள் பெரும் மனக் கொதிப்புடன் உள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒரு உயிரைப் பறித்துள்ளது சிங்கள இனவெறி கடற்படை.

 

நாம் தமிழர் இயக்க உறுப்பினர் படிவம்

 http://www.naamtamilar.org/wp-login.php?action=register






 எம் மீனவர்களைப் கொன்ற சிங்கள கடற்படைக்கு பயிற்சியா? - சீமான் அறிக்கை
இலங்கை-இந்திய உறவை மேம்படுத்தும் வகையில் 2011ம் ஆண்டு இரு நாட்டுக் கடற்படையினர் இணைந்து இலங்கை கடற்பரப்பில் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். இந்தியப் பாதுகாப்புச் செயலாளரின் இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்திய பின்பு இருநாட்டு கடற்படை உறவை மேம்படுத்தும் வகையில் 2011ம் ஆண்டு இலங்கை - இந்திய கடற்படையினர் இணைந்து இலங்கை கடற்பரப்பில் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர் என்றும் இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு மேலும் பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பாதுகாப்புச் செயலாளரின் இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இலங்கையில் கடந்த ஆண்டு சிங்கள இராணுவம் தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை தொடர்பாக ராஜபக்‌ஷேவை இனப்படுகொலையின் சூத்திரதாரியாகவும், இலங்கையின் மீது விசாரணை நடத்தவும் உலகம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக ஐ.நா.குழு. இலங்கைக்கு செல்ல உள்ள நிலையில் இலங்கை கடற்படைக்கு பயிற்சி என்ற இந்திய பாதுகாப்புச் செயலாளரின் இந்த அறிவிப்பு உலகின் கவனத்தை திசை திருப்பும் உத்தியாகும். இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலையை அருகாமையில் இருந்து தொடர்ந்து மறைக்கும் முயற்சியாகும்.
இங்கோ தமிழ்நாட்டில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டபொழுதும் இந்தியக் கடற்படை இதுவரை கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் மீனவன் படகிலும், இந்தியக் கடற்படையின் கப்பலிலும் ஒரே இந்திய தேசியக் கொடி பறந்தாலும் தமிழ் மீனவன் கொல்லப்படும் பொழுதோ இந்தியக் கடற்படை செயலற்று உல்லாசமாக இருக்கிறது. இதோ இன்று கூட தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆனால் நம் மீனவனைக் காப்பாற்ற எதிர்தாக்குதலோ, இலங்கை இராணுவத்திற்கு ஒப்புக்குக் கூட கண்டனமோ தெரிவிக்காத கடற்படை பிறகு யாரைக் காப்பாற்ற ரோந்துப் பயிற்சியை இணைந்து மேற்கொள்ளப் போகிறது?
ஏற்கனவே ஈழத்தமிழர்களைக் கொன்றதற்கு மறைமுகமாக ஆயுதங்கள் உட்பட அனைத்து உதவியையும் செய்த இந்திய அரசு இன்னும் மீதமிருக்கும் அங்குள்ள தமிழர்களையும், இங்குள்ள தமிழ் மீனவனையும் கொல்வதற்கு சிங்கள இராணுவத்திற்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கப் போகின்றதா?என்று தெரியவில்லை.
இந்தியக் கடற்ப்டையின் தமிழர் விரோதப்போக்கு வெந்த எமது புண்ணில் வெந்நீரைப் பாய்ச்சுவதாக இருக்கிறது.அதற்கு எமது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


புலிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி வாங்கியதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள் - சீமான் ஆவேசம்

விடுதலைப்புலிகளிடம் இருந்து நான் 2 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியிருப்பதாகவும், அந்த பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இவ்வாறு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற பெரியார்-எம்.ஜி.ஆர். நினைவு நாள் பொதுக்கூட்டத்தில்  கலந்து கொண்டு உரையாற்றுகையில் சீமான் தெரிவித்தார்.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நேற்று இரவு நடைபெற்ற இக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான செந்தமிழன் சீமான் பேசியதாவது:
மூட நம்பிக்கைகளில் இருந்து மக்களை வெளிக் கொண்டு வர போராடியவர் பெரியார். அவரது கருத்துக்களை சினிமா பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் எம்.ஜி.ஆர்.
வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க. உந்தன் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க”, திட்டம் போட்டு திருடுகிற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது” என்பது போன்ற பாடல்கள் மூலம் நல்ல கருத்துக்களை எடுத்து சொன்னார் எம்.ஜி.ஆர்.
ஈழத் தமிழர்களுக்கு எம்.ஜி.ஆர். போல உதவி செய்த தலைவர்கள் யாரும் கிடையாது.
கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் செத்து மடிகிறார்கள். தமிழக மீனவர்களை சிங்கள இராணுவம் கொன்று குவிக்கிறது. இனிமேலும் தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்கள மாணவர்களை அடிப்போம் என்று பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என்னை கைது செய்தீர்கள். 5 மாதம் சிறையில் அடைத்தீர்கள். இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன்.
1 லட்சம் துப்பாக்கிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்து வந்தவன் நான். சிறையில் இருந்து எனது தம்பிமார்கள் முருகன், பேரறிவாளன், சாந்தன், தங்கை நளினி ஆகியோர் என்னை சந்தித்து விடக் கூடாது என்பதில் சிறைத்துறை அதிகாரிகள் கவனத்துடன் இருந்தனர். ஓடும் தண்ணீரை 5 மாதம் தேக்கி வைத்து விட்டு பின்னர் திறந்து விட்டால் அது காட்டாற்று வெள்ளமாக ஓடும்.
அதைப் போல நானும் வேகத்துடன் செயல்படுவேன். தற்போது எனது தோளில் இரண்டு சுமைகள் உள்ளன. ஒன்று ஈழ விடுதலை, இன்னொன்று சிறையில் இருக்கும் எனது தம்பிமார்களின் விடுதலை. இந்த இரண்டும் நடக்கும் வரை நான் ஓயமாட்டேன்.
தனி ஈழத்தை வென்றே தீருவோம்.
இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையில் தொடங்கி ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது வரை காங்கிரசுக்கு பெரும் பங்கு உண்டு. ஈழத் தமிழர்கள் மீது காங்கிரசுக்கு அக்கறை இல்லை. எனவே காங்கிரசை வீழ்த்துவதே எங்கள் லட்சியம். அது வரை சீமான் ஓயமாட்டான்.
இன்று காங்கிரஸ் அரசில் ஊழல் மலிந்து விட்டது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு, காமன்வெல்த் ஊழல், இதற்கு முன்பு போபர்ஸ் ஊழல் என காங்கிரஸ் கட்சியின் ஊழலை அடுக்கி கொண்டே செல்லலாம். இவைகளில் இருந்து தப்பிப்பதற்காக விடுதலைப்புலிகள் மீது தற்போது வீண்பழி சுமத்த தொடங்கி உள்ளனர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம் என்பது உண்மையா? விடுதலைப்புலிகளால் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து என்பது உண்மையா? விடுதலைப்புலிகள் ஒரு போதும் கோழைகளை கொல்ல மாட்டார்கள். விடுதலைப்புலிகளைப் பற்றி நான் பேசினால், சீமான் கோடி, கோடியாக பணம் வாங்கி விட்டார் என்று கூறுகிறார்கள்.
விடுதலைப்புலிகளிடம் இருந்து நான் 2 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியிருப்பதாகவும், அந்த பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இவ்வளவு பணம் என்னிடம் இருந்தால் அதனை ராஜபக்சேயிடம் கொடுத்து எங்கள் பகுதியை எழுதி வாங்கி இருக்க மாட்டோமா?
நாங்கள் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்துக்காக போராடவில்லை. அரசியல் மாற்றத்துக்காக போராடுகிறோம். நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல போராளிகள், சீர்திருத்தவாதிகள் அல்ல, லட்சியவாதிகள். எனது பேச்சை கேட்பதற்காக என் முன்னால் கூடியிருக்கும் நீங்கள் எல்லாம் எனது பின்னால் அணிவகுத்து வாருங்கள்.
பிரபாகரனின் தம்பி என்ற உரிமையில் உங்களிடம் இதனை கேட்கிறேன். இந்தியாவுக்கு என்று இறையாண்மை, பண்பாடு எதுவும் இல்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு என பலமொழிகளின் பண்பாடே இந்திய பண்பாடு. தமிழுக்காக உயிரை இழக்கவும் தயாராக உள்ளேன்'' இவ்வாறு சீமான் பேசினார்.
இக் கூட்டத்தில் புகழேந்தி தங்கராஜ், திரைப்பட தயாரிப்பாளர் கோட்டை குமார், சாகுல் அமீது, இயக்குனர் செல்வபாரதி, ராஜீவ்காந்தி, ஆ.சி.ராசா, அமுதா நம்பி, ரேவதி நாகராஜன், வக்கீல் கயல்விழி, அன்புத்தென்னரசன் உட்பட பலர் பேசினர்.
இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கராசு, அதியமான், அமுதாநம்பி ஆகியோர் செய்திருந்தனர்.




ராகுல் காந்தி அவர்களே! நீங்கள் தலையிடவும் வேண்டாம்! எங்களைக் கொலையிடவும் வேண்டாம்! - திருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடித் தொடர் - பாகம் 04


''நான் ஈழத்து சீமான் பேசுகிறேன்...'' - ''நான் தமிழகத்து நடேசன் பேசுகிறேன்...'' எனக்கும் நடேசன் அண்ணாவுக்கும் இடையேயான உரையாடல் இப்படித்தான் தொடங்கும்.
வார்த்தை குறைவாகவும் வாய் நிறைந்த புன்னகையாகவும் பேசுவார் தமிழ்ச்செல்வன், ''தமிழ் ஈழ ஆர்வலர்களின் தொலைபேசிப் பேச்சுகள் பதிவு செய்யப்படுகிறதாமே... அடிக்கடி நான் உன்னோடு பேசுவதால் உனக்கு ஏதும் பிரச்சினைகள் வருமா?'' - தமிழ்ச்செல்வனின் குரலில் பரிவும் பதற்றமும் இருக்கும்.
''நீங்கள் என்ன, தமிழ்நாட்டில் என்னை குண்டு வைக்கச் சொல்லியா பேசுகிறீர்கள்? அங்கே நம் உறவுகளின் தலையில் குண்டுகள் விழுவதைப் பற்றித்தானே அண்ணா பேசுகிறோம்... பதிவு செய்பவர்கள் அதனை உரியவர்களிடம் போட்டுக்காட்டினாலாவது அவர்களின் உள்ளத்தில் கருணை சுரக்கிறதா எனப் பார்க்கலாம்!'' எனச் சொல்வேன். அதைக் கேட்டு வேதனையாக சிரிப்பார் தமிழ்ச்செல்வன்.
''வா... வா...'' என்று வாஞ்சையோடு அழைத்தவன், நான் அங்கே போனபோது எதிர்கொள்ள எதிரே வரவில்லை. ''இறந்து ஒரு வருடத்துக்குப் பிறகுதான் நினைவு இல்லம் எழுப்புவது வழக்கம். அண்ணன் இறந்து 90 நாட்கள்தான் ஆகிறது. அதனால்தான் அவர் புதைக்கப்பட்ட இடம் இப்படி இருக்கிறது...'' எனச் சொல்லி கை காட்டினார்கள். மலர்ந்து சிரித்தவன் மண் குவியலாகக் கிடந்தான். கை நிறையக் கார்த்திகைப் பூக்களைக் கொட்டி கையறு கோலத்தில் நின்ற பாவி நான்!
இதுபோல் ஒன்றா... இரண்டா... ஈழப் போர் தீவிரம் எடுத்த வேளையில், 'நிச்சயம் வெல்வோம்!’ என என்னைத் தைரியப்படுத்திய குரல்கள். இறுதிக் கட்டப் போர்க் களத்தில் நின்றபடி, 'சாவை எதிர்நோக்கி நிற்கிறோம். ஆனாலும், போரைக் கைவிடுவதாக இல்லை!’ என உறுதியோடு சொன்ன குரல்கள்!
உலகத்தின் கண் பார்க்க அவர்கள் அழித்தொழிக்கப்பட்ட நிகழ்வு முடிவுக்கு வந்தபோது, என் சிந்தனை எவை குறித்தெல்லாம் ஓடி இருக்கும்? என் மூளை நரம்புகள் எப்படி எல்லாம் மூர்க்கத்தில் தவித்திருக்கும்?
தோற்றவனாகவும் துடித்தவனாகவும் சொல்கிறேன்... மே 18-ம் தேதியே என் உயிர் பிரிந்துவிட்டது. இது இரவல் மூச்சு. உங்களின் முன்னால் ஒரு சவம்தான் உரையாடுகிறது. இந்த சவத்தை உங்களால் என்ன செய்ய முடியும்? செத்துப்போனவனை வெட்டி வீழ்த்தும் தைரியம் சிறைச்சாலைகளுக்கோ, காக்கி உடுப்புகளுக்கோ இருக்கிறதா?   
''ஈழத்து விடிவை இயக்கக் கொள்கையாகப் பூண்டிருப்பவர்களே அமைதியாகிவிட்ட நிலையில் சீமானுக்கு மட்டும் ஏன் இன்னமும் சிலிர்த்துக்கொண்டு நிற்கிறது?'' - அரசியல் சார்ந்தவர்களின் இந்தக் கேள்வி என் காதுபடவே நீள்கிறது.
ஈழத்துக்கும் எனக்கும் நிலவிய உறவைப்போல், தமிழகத்தில் உள்ள பலருக்கும் தமிழ் ஈழ ஆர்வம் இருக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஈழ மக்களும் போராளிகளும் மீள முடியாத கொடூர வளையத்துக்குள் சிக்கித் தவித்தபோது, அண்ணன் பிரபாகரன் மீது பேரன்புகொண்ட முத்துக்குமார் உள்ளிட்ட தமிழகத்து இளங்குருத்துகள் தங்களுக்குத் தாங்களே தீ வைத்து மடிந்தபோது, 'இறுதி நிமிடங்களில் நிற்கிறோம்... தாய்த் தமிழ் உறவுகளே கைகொடுங்கள்’ என யோகி உள்ளிட்ட மூத்த புலிகள் ஏக்கக் குரல் எழுப்பியபோது... ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள்கூட தமிழகத்தையே ஸ்தம்பிக்கவைக்கும் முயற்சியில் இறங்காதது ஏன்?
மது ஒழிப்பு மாநாட்டுக்குக் கூட்டம் திரட்டுபவர்கள், இன ஒழிப்பு நாட்டுக்கு எதிராக வீதிக்கு வராதது ஏன்? மாநில மாநாடுகளுக்கு லட்சோப லட்சம் தொண்டர்களைத் திரட்டும் கட்சிகள் பலவும் இணைந்து ஈழப் போரைத் தடுக்கக்கூடிய கூட்டத்தில் 5,000 பேர்கூட திரளவில்லையே... இதுதான் ஈழத்து கூக்குரலுக்கு நாம் காட்டும் இரக்கமா? மாநாட்டுக்குக் காட்டும் அக்கறையைக்கூட ஆயிரக்கணக்கான தமிழர்கள் மடிந்தபோது நாம் காட்டாமல் போய்விட்டோமே... ஒப்புக்குக் கூட்டத்தைக் கூட்டி, தப்புக்குத் துணை போனவர்கள் பட்டியலில் ஆள்பவர்களின் பெயரோடு நமது பெயரும்தானே கலந்திருக்கும்? 
'நாங்கள்தான் திரட்டவில்லை... நீ எங்கே போனாய்?’ என நீங்கள் திருப்பிக் கேட்கலாம். அன்றைக்கு இந்த சீமானுக்கு அவ்வளவு ஆதரவு கிடையாதய்யா! சுற்றி நின்ற 10 பேரைத் தவிர வேறு படை இல்லை. என் பலம் எனக்குத் தெரியும். அதனால்தான் ஈழ ஆர்வலர்களாகத் தெரிந்த உங்கள் அனைவரின் பின்னாலும் நான் ஓடோடி வந்தேன். இறுதி மூச்சின் கணத்திலும் ஈழ வலியை உணர்த்தும் சக்தி உங்களுக்கு இருக்கும் என நம்பி, தேடித் தேடிப் பின்னால் வந்தேன். பேரதிர்வு நடந்தபோதும்,  பூமி நழுவாதவர்களாய் தமிழகத்து ஜீவன்கள் வழக்கமான வேலைகளில் மூழ்கியபோதுதான் அரசியல் பக்குவங்கள்(?) பொட்டில் அறைந்தாற்போல் எனக்குப் புரிந்தது.
இயலாமையில் துடித்து அழுதவர்கள் எல்லோரும் கூடி எடுத்த முடிவுதானய்யா, 'நாம் தமிழர்’ அமைப்பு. இது தொடங்கப்பட்டது அல்ல... தொடரப்பட்டது. ஐயா ஆதித்தனார் இந்த அமைப்பைத் தொடங்கிய போது, அவருக்கு வலு சேர்க்கத் தவறிவிட்டது தமிழினம். 'என் வழிவரும் வீரப் பிள்ளைகள் இந்த இயக்கத்தைத் தொடருவார்கள்!’ என அப்போதே நம்பிக்கையோடு சொன்னார் ஆதித்தனார். சிறு பொறிகளாய் திசைக்கொரு பக்கமாய் சிதறிக் கிடந்தவர்களைத் திரட்டி பெருநெருப்பாக ஐயாவின் வழியில் பின்தொடர்கிறோம்.
ஈழத்தை இழவுக்காடாக்கிய காங்கிரஸுக்கு தமிழர்களின் வலியைப் புரியவைக்கும் விதமாகத்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் எவராக இருந்தாலும் சரி என்று நாங்கள் ஆதரித்தோம். காங்கிரஸின் தமிழகத் தலைவர் தங்கபாலுவை வீழ்த்தியதன் மூலம் தமிழர்களின் நெத்தியடியை டெல்லி தலைமைக்கே உணர்த்தினோம். இளங்கோவனை மண் கவ்வவைத்தோம். அப்போதே அரசியல் அதிரடிகளை அரங்கேற்றுவதற்கான சக்தி எங்களுக்குப் பிறந்துவிட்டது. ஒடுக்குவதாக நினைத்து இந்த அரசாங்கம் அடுத்தடுத்து என்னை சிறையில் தள்ளி, என் சக்தியைத்தான் பெருக்கிவிட்டது. ஈழத்து வலியை வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸுக்குப் புரியவைக்க எங்களின் இயக்கம் இப்போதே தயார்.
ஆனால், காங்கிரஸை கம்பீரமாக நிமிரவைக்க... தாய்த் தமிழகத்தில் இன்றைக்கு நடைபோடுகிறாராம் ராஜீவ் காந்தியின் வாரிசு. தன் முகம் பார்த்த தமிழர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக அந்த ராஜீவ் பெருமகனாரின் வாரிசு, 'இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் நிச்சயமாகத் தலையிடுவேன்!’ எனச் சொல்லி இருக்கிறாராம்.
வேண்டாமய்யா அப்படி ஒரு விபரீத முடிவு! உங்களின் தகப்பன் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தலையிட்டார்... 12 ஆயிரத்துக்கும் மேலான எங்களின் உறவுகள் பலியானார்கள். உங்கள் தாய் சோனியா காந்தி இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தலையிட்டார். எங்களின் இனமே பிணமானது. இப்போது நீங்களுமா? அங்கே மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களும் உங்கள் கண்களுக்கு உறுத்தலாகத் தெரிகிறார்களா?
ராகுல் காந்தி அவர்களே.... நீங்கள் தலையிடவும் வேண்டாம்... எங்களைக் கொலையிடவும் வேண்டாம்.
தமிழகத்தை மீட்கும் சக்தி உங்களுக்கு இருப்பதாக எண்ணி, அறிவுமிகு மேதாவிகள் உங்களிடம் ஆலோசனை கேட்டார்கள். சோற்றில் விஷம் ஊற்றியவனிடம், செரிமான வெற்றிலைக்கு சுண்ணாம்பு கேட்கும் என் மறத் தமிழர்களின் அறியாமை மிக்க மாண்பை நான் எங்கே போய்ச் சொல்வேன்? 
ராகுல்காந்தி அவர்களே... தமிழக இளைஞர்களுக்கு அக்கறையோடு ஓர் அறிவுரையைச் சொல்லி இருக்கிறீர்கள்... 'மது குடிப்பது தவறு’!
அப்படியானால்... இரத்தம் குடிப்பது?!
திருப்பி அடிப்பேன்....

ஈழ விடுதலைக்காக எவ்வளவோ தூரம் போராடியவர் அவ்வளவு சீக்கிரம் போகமாட்டார் - சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விடுதலைப்புலிகள் இயக்க தேசியத்தலைவர் பிரபாகரன் பற்றிய கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கே- தமிழீழத்துக்காக, தமிழர்களுக்காக எவ்வளவு காலத்திற்கு நீங்கள் போராடுவீர்கள்?
ப- ஒரு மூன்று மணி நேர சினிமாவில் ஆரம்பக் காட்சியில் தந்தையை கொன்ற வில்லனை கடைசியில் கொல்லும்போது கைதட்டுகிறீர்கள். ஒரு இனத்தையே அழித்ததை எப்படி மறந்துவிட முடியும். ஈழ மக்களுக்காக எந்நாளும் போராடுவோம் என நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனருமாகிய சீமான் தெரிவித்துள்ளார்.
கே- தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்தன. அச்செய்தி உண்மையானதா? ப- பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும். பிரபாகரன் இறந்துவிட்டார் என்று அதற்கு சிங்களன் 20 கதை சொல்லுகிறான். அதை எல்லாம் நம்பாதீர்கள். ஈழ விடுதலைக்காக இவ்வளவு தூரம் போராடியவர் அவ்வளவு சீக்கிரம் அந்த போராட்டத்தை விட்டு போகமாட்டார் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் வேகமாக இயங்குகிறோம்.

கே- இறுதி யுத்தத்தின் போது என்ன நடந்தது ? அங்கிருந்த புலிகள் தப்பியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன, அதுபற்றி....! ப- என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அதனால் எல்லோரும் அமைதியாகத்தான் இருக்க வேண்டும். இறுத்திக் கட்டப்போரில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. கூட நின்றவர்களுக்குகூட கூட தெரியாது. அப்படியிருக்க யாரும் அது பற்றி சொல்லுவது சரியல்ல. என்னாலும் சொல்லமுடியாது.
கே-தலைவர் பிரபாகரன் இருக்கின்றார் என நீங்கள் நம்புகின்றீர்களா?ப- என் அண்ணன் இருப்பதாக ஏன் நினைக்கிறேன் என்றால், எனக்கு என் அண்ணன் இறந்துவிட்டார் என்று நம்பகமான இடத்தில் இருந்து தகவல் வரவில்லை. அதனால் நம்புகிறேன் அவர் இன்னமும் உயிருடன் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார் என.

கே- தமிழ் மக்களுக்கு இத்தொலைக்காட்சி பேட்டியூடாக ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?ப- இப்போது எது சொன்னாலும் அது வரலாற்றுப்பிழையாகிவிடும். அதனால் பொறுத்திருங்கள். யார் சொல்லுவதையும் நம்பாதீர்கள்.காலம் பதில் சொல்லும்.


புதுவையில் சீமான் பேட்டி 1



புதுவையில் சீமான் பேட்டி 2



புதுவையில் சீமான் பேட்டி 3




 ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தை சுட்டிருந்தால்...! - திருப்பி அடிப்பேன்! - சீமான் சிறையில் எழுதிய அதிரடி தொடர் - பாகம் 01

எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்! என கூட்டத்தில் உரையாற்றியிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலையானார். அவர் சிறையிலிருந்தபோது எழுதிய அதிரடி அனல் கனல் தொடர்.
தொடரின் முதலாவது பாகம்:
''ஏனடா எரிக்கிறாய் என்றோ,
ஏனடா அடிக்கிறாய் என்றோ
எவனடா கேட்டீர் அவனை?
அடியென அவனுக்குச்
சாட்டை கொடுத்தவனும்
சுடுவென தோட்டா கொடுத்தவனும்
தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.
என்ன கொடுமையடா இது!''
- புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய வரிகள் என் நித்திரையைக் கிழிக்கின்றன. புரண்டு புரண்டு படுக்கிறேன். கொசுக்கடி இல்லை. குளிர் இல்லை. அட்டைப்பூச்சியோ... அரிப்புத் தொல்லையோ இல்லை. ஆனாலும், நித்திரை வரவில்லை. 'தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சுகிற அளவுக்கு அப்படி என்ன செய்தோம்?’ என்கிற கேள்வி மனதுக்குள் குறுகுறுக்கிறது. என் மீனவனின் தொண்டையில் விழுந்த தூண்டிலின் வலியைச் சொன்னது தவறா? அதற்கா தேசியப் பாதுகாப்புக்கு பங்கம் வந்துவிட்டதாகப் பாய்ச்சல் காட்டினார்கள்?
என்னை ஒருவன் அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ என்றேன். மீண்டும் அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ எனத் துடித்தேன். மறுபடியும் சக்தி திரட்டி அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ என அலறினேன். அடுத்தும் அடித்தான். இனிமேல் அடித்தால், ஓங்கித் திருப்பி அடிப்பேன். 'ஐயோ வலிக்கிறது’ என அலறுவான். 'வலிக்கிறதா அய்யா, அப்படித்தான் எனக்கும் வலித்தது அய்யா, இனிமேல் என்னை அடிக்காதே!’ என்பேன்.
இதைத் தவிர உலக மகா குற்றத்தை ஏதும் இந்த சீமான் செய்துவிடவில்லை. 60 ஆண்டுகளாக ஈழத்திலும், 20 ஆண்டுகளாக இங்கேயும் தமிழக மீனவர்களைத் துரத்தித் துரத்தி அடிக்கிறான் சிங்களவன். 'இனியும் அடித்தால்...’ என வலி பொறுக்காமல் அலறியது, இந்த அரசாங்கத்தை ஆத்திரப் படுத்திவிட்டதாம். வலையோடு போனவர்கள் ரணமாகவும் பிணமாகவும் ஒதுங்கியபோது, தமிழினத் தலைவராக இருக்கும் மனிதருக்கு வராத கோபம்... 'எம் இனத்தை ஏனடா அடிக்கிறாய்?’ எனக் கேட்டபோது கிளர்ந்துவிட்டதாம்!
சிங்கள மாணவனை அடிப்பேன் என எப்படிச் சொல்லலாம்? இரு இனங்களுக்கு இடையே பிரிவினையைத் தூண்டும் வாதம் அல்லவா இது?'' - ஆத்திரத்தில் அலறியது அரசுத் தரப்பு. எங்களவனை அடிக்கும்போது பாயாத சட்டம், சிங்களவனை அடிப்பேன் எனச் சொல்லும்போதே பாய்கிறது.
சட்டம் - ஒழுங்கு குலைந்துவிட்டதாக, பேருந்துகள் கொளுத்தப்பட்டதாக, போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டதாக, ரயில்கள் தடம் புரளவைக்கப்பட்டதாக எங்கெங்கு இருந்து தகவல் வந்ததோ... 'இனியும் சீமானை வெளியேவிட்டு வைத் திருந்தால், தமிழகமே சுடுகாடாகிவிடும்!’ எனப் பதறி, தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சினார்கள்!
அதன் பிறகுதான் தமிழகம் அமைதியானதாம். சட்டம் - ஒழுங்கு சீரானதாம். பொது மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் அமைதியாக நடமாடினார்களாம். இந்த தனிப்பட்ட சீமானால் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கைக் கெடுக்க முடியுமானால், இந்த நாட்டைவிட பலம் வாய்ந்தவனா நான்? சிரிப்பாகத்தான் இருக்கிறது!
ஓர் அறையைவிட்டு வெளியே வருவதைப்போலத்தான், சிறையைவிட்டு வெளியே வந்திருக்கிறேன். கம்பிக்குள் தள்ளிக் களி தின்னவைத்தால், 'தம்பி’க்காகப் பேசும் பேச்சைத் தடுத்துவிடலாம் என எண்ணினார்களோ என்னவோ... வேலூர் சிறையில் அடைத்தார்கள். என் குரல்வளையை உடைக்கிற சக்தி அந்தக் கொட்டடிக்கு இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. நஞ்சுக் குப்பி கடிக்கவும் தயங்காதவன், அட்டைப் பூச்சிக் கடிக்கு அரண்டுவிடுவான் என நினைத்ததே கேவலம். அவர்கள் பெரியாரின் கொள்கை வழி வந்தார்களோ இல்லையோ... நான் அந்தப் பழுத்த தாத்தாவின் பழுக்கக் காய்ச்சிய தத்துவங்களின் தடம் வந்தவன். 'சோம்பலும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்!’ என 90 வயதில் சொன்ன அந்தப் போராளியின் பேரனை ஒரு அறைக்குள் அடைத்துவைத்து அடக்கி விட முடியுமா?
ஐந்து தடவை சிறைவாசம்... அதில் இரண்டு முறை தேசியப் பாதுகாப்பு சட்டம். சரமாரியாக வழக்குகள்... ஏன் இவை எல்லாம்? அரசாங்கத்தையும் அதன் அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு, இந்தத் தேசத்தின் வளத்தை சுரண்டித் தின்றேனா... உறவுக் கூட்டத்தை ஊரெல்லாம் வளர்த்து, அகப்பட்ட இடம் எல்லாம் அள்ளி, உலகம் எங்கும் ஓடி ஓடிப் போய்ப் பதுக்கும் அளவு சொத்து குவித்தேனா? எத்தனை சுழியன் என எண்ண முடியாத அளவுக்கு லட்சம் கோடிகளைப் பதுக்கிவிட்டேனா?
ஈசல் இறந்தால்கூட இழவு கொண்டாடும் இனத்தில் பிறந்துவிட்டு, இனமே இறந்து கிடக்கையில் கை கட்டி, வாய் மூடி, கதறல் அடக்க இந்த மூர்க்கக்காரனால் முடியவில்லை. ஒப்பாரி வைத்ததைத் தவிர, ஒரு தவறும் செய்யாதவனை பயங்கரவாதியாகப் பார்க்கிறீர்களே... இந்த சீமான் சென்னைக்கு எதற்காக வந்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
150 ரூபாய்க்கு மிளகாய் மூட்டையைப் போட்டு விட்டு சென்னைக்கு என்னை பேருந்து ஏற்றி அனுப்பினான் என் அப்பன். வறுமையை ஜெயிக்கவும் - வாழ்ந்து காட்டவும் சென்னைக்கு வந்து, மாதத்துக்கு ஒரு முறை 100 ரூபாயைக்கூட அப்பனுக்கு அனுப்ப முடியாமல், எத்தனையோ வருடங்களை இயலாமையிலேயே கழித்தவன். இன்றைக்கும் சொந்த ஊரில் ஒரு வீடு கட்ட முடியவில்லையே என்கிற ஏக்கம் நீங்காதவன். என்னையா பயங்கரவாதி எனச் சொல்லி பயம் காட்டுகிறீர்கள்?
அறிவாற்றலும், வீரமும் செறிந்துகிடக்கும் இந்த இனத்துக்கு அரசியல் வலிமை சேர்க்கும் பற்றாளர்கள் பற்றாக்குறையாகி விட்டதுதானே எங்கள் பதற்றத்துக்குக் காரணம். கண் முன்னே சொந்த இனம் கருவறுக்கப்பட்டபோது, பட்டம் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டுத் துடிக்கிற தலைவன் எங்களுக்கு இல்லாமல் போய்விட்டானே... இனத்துக்காகக் குடும்பத்தையே வாரிக் கொடுத்த தலைவன் பிரபாகரன் அங்கே களமாடி நிற்க... குடும்பத்துக்காக இனத்தையே காவு கொடுத்து வேடிக்கை பார்த்த கருணாநிதியை எப்படி எங்களின் தலைவனாய் ஏற்க முடியும்?
ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தைச் சுட்டிருந்தால்... வல்லூறுகளின் கொடூரங்கள் அவருடைய வாயைத் திறந்திருந்தால்... நாங்கள் ஏனய்யா நரம்பு முறுக்கி சிறைக்குக் கிளம்பப்போகிறோம்? இனத்தைக் காக்க நீங்கள் இருப்பதாக எண்ணி சினத்தை அடக்கி இருப்போமே... 'இனப் பாசம் கிலோ என்ன விலை?’ எனக் கேட்கிற ஆளாக, மொத்தக் கொடூரத்தையும் சத்தமின்றிப் பார்த்துக்கொண்டு இருந்தீர்களே... இப்படிப்பட்ட இதயத்தோடு வாழும் உங்கள் ஊரில் ஒப்பாரிவைப்பதும் உலக மகாக் குற்றம்தான்! கேள்வி கேட்பதும், கேவி அழுவதும் தேசியப் பாதுகாப்பு மீறல்தான்!
கொடூரப் போரில் ஈழமே எரிந்து காடாகிக் கிடந்த வேளையில், எங்களின் கோபம் தமிழகத்தில் வசிக்கும் ஒரு சிங்களவனையாவது சீண்டியதா? ஒரு புத்த துறவியாவது எங்களால் துரத்தப்பட்டாரா? சிங்கள இராணுவத்தின் வெறித் தாண்டவத்துக்கு டெல்லி ஆயுதம் கொடுக்க... அதை சென்னை கை கட்டி வேடிக்கைப் பார்க்க... துடித்துப்போன நாங்கள் எங்கள் உயிர்களைத் தானே தீக்குச்சிக்குத் தின்னக் கொடுத்தோம். எங்களின் இயலாமையும் கோபமும் ஒரு சிங்களவனின் மீதாவது திரும்பியதா? அப்போதும் சிங்கள மாணவர்கள் இங்கே படித்துக்கொண்டு தானே இருந்தார்கள்? சிங்கள வியாபாரிகள் எங்கள் தெருக்களில் திரிந்துகொண்டுதானே இருந்தார்கள்? மாற்று இனத்துக்கு மதிப்புக் கொடுக்கும் எங்களின் மாண்பு அப்போது புரிய வில்லையா இந்த அரசாங்கத்துக்கு? என் இனமே எரிந்து சாய்ந்தபோது... எதிர்த்துக் கேட்கத் திராணியற்றவர்கள், சிங்கள மாணவனை அடிப்பேன் என்றதும் சீறுகிறார்களே... இது எந்த ஊர் நியாயமய்யா?
சிறையில் தள்ளி என் குரல்வளையைச் சிதைத்து விடலாம் எனத் திட்டமிட்ட கருணாநிதிக்குச் சொல்கிறேன்... எத்தனை முறை வேண்டுமானாலும் உங்களின் பயங்கர சட்டங்களைப் பாய்ச்சுங்கள். உங்களைப்போல், 'ஐயோ... கொலை பண்றாங்கப்பா... காப்பாத்துங்கப்பா...’ என அலறித் துடிக்கும் ஆள் நான் இல்லை! என் நாடி நரம்பின் கடைசித் துடிப்பையும் நீங்கள் துண்டித்துப் போட்டாலும், உங்களிடம் மண்டியிட நான் தயார் இல்லை.
எந்த வார்த்தைகளுக்காக என்னை வளைத்தீர்களோ... அதே வார்த்தைகளை கொஞ்சமும் பயமின்றி உரக்கச் சொல்கிறேன்...
''எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்!''
ஓயாது அலை..........
நன்றி: ஜூனியர் விகடன்



 மாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூருவோம்!தொடர்ந்து வழி நடப்போம்! - சீமான் அறிக்கை

ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முதலாக தன்னைத் தானே எரியூட்டிக் கொண்ட மாமனிதன் அப்துல் ரவூப் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. இது குறித்து இன்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முதலாக தன்னைத் தானே எரியூட்டிக் கொண்ட மாமனிதன் அப்துல் ரவூப் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
தன் 24 ஆம் வயதில், தன்னையொத்த தமிழ்ச் சொந்தங்கள் ஈழத்தில் இன உரிமைக்காக உயிரைத் துறந்து போராடிக் கொண்டிருக்கையில் அதே உணர்வோடு தன் இன்னுயிரை தீக்குளித்துப் போக்கிய வீரம் செறிந்த நாள் இது.
அன்று எந்த நோக்கத்திற்காக அப்துல் ரவூப் தன் இன்னுயிரைப் போக்கினாரோ அதே நோக்கம் இன்று மேலும் மேலும் வலுப்பட்டிருக்கிறது.அன்று அப்துல் ரவூப் உயிர் துறந்த பொழுது தமிழ்நாட்டில் இன எழுச்சி ஏற்பட்டிருந்தால் இன்று ஈழத்தில் இந்த மோசமான நிலை ஏற்பட்டிருக்காது.
அன்று அப்துல் ரவூப் உயிர் துறக்கும் முன், 'ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்' என்று கூறினார்.இன்று அவரது கூற்றுப்படி தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் பல்லாயிரம் முத்துக்குமார்கள் தோன்றி உள்ளார்கள்.
இந்த நாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி என்னவென்றால் அப்துல் ரவூப் போன்ற மறத்தமிழர்கள் மேற்கொண்ட லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.அதே சமயத்தில்

இனியொரு அப்துல்ரவூப்பும் முத்துக்குமாரும் தோன்றாமல் இருப்பது,நமது கையில்தான் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும்தான் அந்த நிலையை உருவாக்கும். அவர்களின் தியாகங்கள் ஆண்டுக்கொருமுறை நினைவுகூருவதற்காக மட்டும் அல்ல.
அது நம் இனம் விடுதலை பெறும் வரையில் நம் நெஞ்சிலே எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்..




சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு செந்தமிழன் சீமான் வாழ்த்து கடிதம்
 
கர்நாடக மாநிலம் பெங்களுரில் நடைபெற்றுவரும் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாமில் கலந்து கொள்ளவிருந்த இனவெறி பிடித்த சிங்களக் கொலைகார அமைச்சரான சாலிந்த திசாநாயக்கவை வரவிடாமல் போராட்டம் நடாத்தி விரட்டியடித்த கன்னட வாழ் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்து  நாம் தமிழர் கட்சி. தலைவர் சீமான் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தின் விபரம் வருமாறு:
கன்னடவாழ் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
கடந்த 10.12.2010 அன்று இனவெறி பிடித்த சிங்களக் கொலைகார அமைச்சரைத், தமிழுணர்வு மேலோங்கிநிற்கும் நம் மண்ணில் நடமாட விடாமல் ஓட ஓட விரட்டியடித்ததால் சிறை சென்று மீண்ட நாம் தமிழர் கட்சியின் எம் உயிர்த் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும், தாய்மார்களுக்கும் ஏனைய தமிழ் அமைப்புகளுக்கும் அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிவரும் காலங்களில் இதுபோல், நம் இனம் காக்க,மொழி காக்க , மண் காக்க, ‘தமிழால் இணைவோம் – நாம் தமிழராய் எழுவோம்!’ என்றும் உரிமைக்குப் போராட வேண்டுமென்று கேட்டுக்கொள்வதுடன். தமிழின வரலாற்றில் எழுச்சிமிக்க இந்நிகழ்ச்சிக் குறிப்பு பதிவு செய்யப்படும். களமாடும் வேங்கைகளை உளமாரப் பாராட்டுகிறேன்,புரட்சி வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.



தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமான் கைதானது செல்லாது - இதையடுத்து சீமான் நாளை விடுதலையாகிறார்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான செந்தமிழ் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து சீமான் நாளை விடுதலையாகிறார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கப்படுவதை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



பரபரப்பான அந்த சூழ்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க சீமான் வந்தபோது, போலீசார் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இதனை எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மனு மீதான வழக்கு விசாரணையின்போது, தேசிய பாதுகாப்பு சட்டத்தினை ஒருவர் மீது பிரயோகிக்க மாநகர ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என, சீமானின் வழக்கறிஞர் வாதிட்டார். சீமானுக்கு எதிராக கூடுதல் மாநகர ஆணையர் பிறபித்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரினார்.

வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மாநகர காவல்துறை ஆணையர் பதவியில் இல்லாதபோது, கூடுதல் ஆணையருக்கு முழு அதிகாரம் உள்ளதாக வாதாடினார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டம் பிரயோகிப்பதற்கு, மாநகர காவல்துறை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டினர். எனவே, சீமானுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் நடவடிக்கையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சீமான் நாளை விடுதலையாகிறார்.

ebook