Wednesday, April 20, 2011

கனடியத் தமிழர் பே ரவை ஊடக அறிக்கை: தமிழின உணர்வாளர்கள் தீக்குளிப்பதை தவிர்த்து போராட வேண்டும்!


தமிழின உணர்வாளர்கள் தீக்குளிப்பதை தவிர்த்து போராட வேண்டும்!
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை வெளி வந்துள்ள வேளையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் உள்ள சீகம்பட்டி கிராமத்தில் இளம் பொறியியலாளரான கிருஷ்ண மூர்த்தி என்ற இளைஞர் தனக்குத் தானே தீ மூட்டி தீக்குளித்துள்ளார். அவரது உணர்வு பூர்வமான இத்தியாக நிகழ்வானது எம்மை அதிர்ச்சிக்கும், ஆறாத் துயருக்கும் ஆளாக்கி உள்ளது. விலை மதிப்பற்ற உயிரை அவர் தியாகம் செய்துள்ளமை எம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அவரது இன உணர்வினை நாம் மெச்சும்
அதேவேளையில் இது போன்று தமிழ் நாட்டில் இன்னுமொரு உயிர்ப்பலி ஏற்படக் கூடாது. இதுவே இறுதி உயிர்ப்பலியாக இருக்கட்டும்.
மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டும், இந்தியா ஸ்ரீலங்காவுக்கு உதவக் கூடாது இவற்றைக்கண்டிப்பதற்காகவே நான் தீக்குளிக்கிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு அவர் தீக்குளித் துள்ளார்.
இத்தகைய இன உணர்வுள்ள இளந்தலைமுறையினர், தமிழ் மக்களின் இதயத்தை ஈட்டிபோல் தைக்கும் இன்னுயிர் தியாகத்தைக் கைவிட்டு தமிழினத்தின் நலனுக்காகப் பாடுபடும் அரசியல் கட்சிகளில் இணைந்து அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது பணிவான வேண்டுகோளாகும் என கனடாவிலுள்ள தமிழர் பேரவையின் பேச்சாளரான டேவிட் பூபாலபிள்ளை வேண்டுகோள் விடுத் துள்ளார்.

தமிழருக்காய் இன்னுயிர் தந்த கிருட்டிணமூர்த்திக்கு நாம் தமிழரின் வீரவணக்கம்-சீமான்

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ள சீகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் கிருட்டிணமூர்த்தி என்ற நம் தமிழ் உறவு ஈழத்தில் தமிழ்ச் சொந்தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை கண்டு மனம் பொறுக்காமலும், தமிழர்கள் இன்னும் அங்கு படும் இன்னல் கண்டும் நேற்று அதிகாலை 5 மணி அளவில்,  3 லிட்டர்  கல்லெண்ணையை (பெட்ரோலை), தன் மீது ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு தன் இன்னுயிரைப் போக்கிக் கொண்டார் என்னும் துயரச் செய்தி என் நெஞ்சில் இடியாய்த் தாக்கியது. அவருக்கு நாம் தமிழர் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மண்ணில் இன்னும் இனமானம் அற்றுப்போய் விடவில்லை அது இன்னும் நீறு பூத்த பெரு நெருப்பாக அனைவரின் நெஞ்சிலும் இருக்கிறது என்று அப்துல் ரவூப் தொடங்கி, முத்துக்குமார், ரவிச்சந்திரன், உள்ளிட்டு இப்பொழுது தன் இன்னுயிர் துறந்த கிருட்டிணமூர்த்தி போன்ற எத்தனையோ மானமுள்ள மறத்தமிழர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இந்தச் சமூகத்தின் செவிட்டுக்காதில் மட்டும் எம் தமிழ்ச் சொந்தங்களின் கூக்குரலும் அவர்கள் படும் துயரமும் இன்னம் விழவில்லை.
இனம் வீழ்ந்தது அழுவதற்கு அல்ல, மீண்டும் எழுவதற்கு என்றும் அதற்கு நம் அனைவரின் பங்களிப்பும் தேவை என்பதால் உயிரைப்போக்கிக் கொள்வது போன்ற அளப்பரிய தியாகச் செயலில் ஈடுபட வேண்டாம் என்று எம் சொந்தங்களை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே சமயத்தில் லட்சிய உறுதி கொண்ட கிருட்டிணமூர்த்தி போன்ற மறத்தமிழர்கள் எதற்காக தம் இன்னுயிரை இழந்தார்களோ அந்த லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். அதே சமயத்தில் இனியொரு கிருட்டிணமூர்த்தி தோன்றாமல் இருப்பது, நமது கையில்தான் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும் தான் அந்த நிலையை உருவாக்கும். நம் இனம் விடுதலை பெறும் வரையில் நம் போராட்டப் பாதையை நாம் தொடர வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Sunday, April 17, 2011

கண்ணகி கோட்டத்தில் தமிழர் உரிமையை நிலை நாட்ட விரைவில் போராட்டம்-சீமான்

இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லையில் கூடலூர் அருகிலுள்ள பளியன்குடி என்னுமிடத்திலிருந்து வனப்பகுதியில் இருந்து  6 கிலோ மீட்டர் தொலைவில்  தமிழருக்குச் சொந்தமான மங்கலதேவி கண்ணகி கோட்டம் இருக்கிறது.பாண்டிய மன்னன்  தவறாக நீதி வழங்கிய மதுரை மாநகரமே தீப்பற்றி எரியட்டும் என்று கண்ணகி சாபம் விட்டு மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் சென்றதாகவும் அது இந்த இடம் தான் என்றும் வரலாறு சொல்கிறது.அதன் நினைவாக மங்கலாதேவி கண்ணகி கோயில் இருக்கிறது.காலம் காலமாகத் தென் மாவட்டத் தமிழர்கள் இங்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.இது தமிழர் தம் தாய் நிலமாகும்.இங்கு வேறு யாருக்கும் உரிமை இல்லை.இதனைப் பல்வேறு கட்டங்களில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளால் நடத்தப்பட்ட சர்வேக்களும் நிரூபிக்கின்றன.
இங்கு செல்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து முறையான சாலை வசதி மட்டும் இல்லாமல் இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கேரள அரசு நயவஞ்சகமாக  1976-ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது.  இந்த சாலையை மட்டும் வைத்துக் கேரள அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச் சொந்தமானது என்று கடந்த பல வருடங்களாக உரிமை கொண்டாடுகிறது.அதன்பின் அமைந்த திராவிட அரசுகள் இதில் உரிய கவனம் செலுத்தாததால் நமது கோட்டம் நம்மை விட்டுப் பறி போய் விட்டது.இதன்பின்பு அங்குள்ள தமிழர்கள் கண்னகி கோட்டத்திற்கு உரிமை கொண்டாடி இதற்காக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் இது வரை உரிய தீர்வு கிட்டவில்லை.
ஆனால் மறுபுறமோ கேரள அரசின் திமிர்த்தனம் அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.கோவிலுக்குச் செல்லும் பாதை தன்னிடம் இருப்பதால்  முதலில் கோவிலை ஆக்கிரமிப்பு செய்து உரிமை கொண்டாடிய கேரள அரசு இப்பொழுது ஒவ்வொரு வருடமும் நமது பக்தர்களிடம் செய்யும் சண்டித்தனம் புதிது புதிதாக அதிகரித்து வருகிறது.வருடம் முழுவதிலும் வழிபட்ட  பக்தர்களை முதலில் அனுமதிக்க மறுத்த கேரள அரசு  வருடத்திற்கு முழுநிலவு அன்று ஒரு நாள் மட்டுமே பக்தர்களை இங்கு பலத்த கெடுபிடிகளுக்குப் பின் அனுமதிக்கிறது.மேலும் அங்குள்ள கண்ணகி சிலையையும் திட்டமிட்டு களவாடிச் சென்று விட்டு சிலை காணாமல் போய் விட்டதாக நாடகமாடுகிறது.மேலும் திட்டமிட்டு பல்வேறு பிரச்சனைகளை தமிழருக்கு உருவாக்குகிறது.குறிப்பாக இங்கிருந்து செல்லும் தமிழர்களுக்கு ஜீப் கட்டணத்தை மலையாளிகள் திட்டமிட்டு கொள்ளையடிப்பதற்கு அங்கீகாரம் தருகிறது.சாலை வசதிகளும் மிக மோசமாக இருக்கிறது.மேலும் அங்கு செல்லும் தமிழர்கள் பாதுகாப்பான பயணமும் மேற்கொள்ள முடிவது இல்லை.மொத்தத்தில் அங்கு தமிழர்கள் வருவதை கேரள அரசு துளியும் விரும்புவது இல்லை.இதற்கு முக்கிய காரணம் அந்தப் பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் எண்ணமே ஆகும்.ஆகவே முதற்கட்டமாக இந்த வருடம் தேனி மாவட்ட ஆட்சியர் பவுர்ணமி நிலவன்று கண்ணகி கோட்டம்  செல்லும் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு கேரள இடுக்கி மாவட்ட ஆட்சியருடன் பேசி உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
திருவிழா முடிந்த பின்பு தமிழக அரசு நமது பகுதியில் இருந்து கண்ணகி கோட்டம் செல்ல உரிய சாலை வசதிகளை செய்து கொடுத்து  நமது இழந்த பகுதிகளையும்,உரிமைகளையும்  மீட்டெடுக்க வேண்டும்.இல்லையெனில் நாம் தமிழர் கட்சி அப்பகுதி  மக்களுடன் இணைந்து அதற்கான போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறோம்.

ebook