இந்திய விமான சேவைகள் அதிகார சபையினூடாக பலாலியில் சர்வதேச இந்திய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாக வெளிவருகின்ற தகவல்கள் தொடர்பிலான உண்மைத் தன்மையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று சபையில் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்திய விமான சேவை அதிகார சபை இங்கு விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனடிப்படையில் பலாலி விமான தளம் தொடர்பிலான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகளுக்கு அரச தரப்பிலிருந்து இதுவரையில் மறுப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இது இவ்வாறிருக்க எமது நாட்டில் விமான நிலையம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் அதற்கு 400 முதல் 450 கோடி ரூபா வரையில் செலவிடவிருப்பதாகவும் இந்திய விமான சேவை அதிகார சபை அறிவித்திருக்கின்றது.
வடக்கிற்கான படைக் கட்டளைத் தலைமையகம் பலாலியிலேயே அமைந்துள்ளது. பலாலி விமானத் தளமானது பாதுகாப்பு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறானதோர் இடத்தில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைக்கும் பட்சத்தில் அங்கு பாதுகாப்பு சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்படும்.
அதுமட்டுமன்றி இந்திய விமான சேவை அதிகார சபைக்கு பலாலியை கொடுப்பதானது இரகசியமாக மேற்கொள்ளப்படவேண்டிய விடயமல்ல. இதிலுள்ள உண்மை நிலைவரங்கள் தொடர்பில் அரசாங்கம் இந்த பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். என்றார்.
No comments:
Post a Comment