சாதி விவகாரங்களைப் பேசி... சர்ச்சையில் சிக்குவது அரசியல்வாதிகளுக்குப் புதிதல்ல. சமீபத்தில் தொல்.திருமாவளவன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சாதி அடையாளம் சொல்லிப் பேசியது, தமிழ் அமைப்புகளை கொந்தளிக்க வைத்து இருக்கிறது!
கிளிநொச்சியில் இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்து பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு தமிழ் கற்றுக் கொடுத்த பேராசிரியர் அறிவரசன், திருமாவளவனின் பேச்சால் அதிர்ந்து போயிருக்கிறார்.
நம்மிடம் அவர், 'பிரபாகரனை சாதி அடையாளப்படுத்தி திருமாவளவன் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே, பிரபாகரனுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கும் பழ.நெடுமாறன், வைகோ, சீமான், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா ஆகியோரிடம் எல்லாம் சாதி பற்றிப் பேசாத பிரபாகரன், திருமாவளவனிடம் மட்டும் பேசினாரா?
நான் கிளிநொச்சியில் இருந்த காலத்தில் அவருடன் பல மணி நேரம் பேசி இருக்கிறேன். ஆனால், ஒருபோதும் அவர் சாதி குறித்து ஒற்றை வார்த்தைகூடப் பேசியது இல்லை.
அவர் சாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட தன்னிகரற்ற தலைவர்.
புலிகள் அமைப்பில் பல்வேறு சாதி, மதங்களைச் சேர்ந்தவர்கள் இருந்த போதிலும், இயக்கத்துக்குள் வந்ததும் அந்த அடையாளத்தை மறைப்பதற்காக பொதுப் பெயர் கொடுக்கப்படுவது உண்டு.
இயக்கத்துக்குள் யாரும் பிறரிடம் சாதியையோ, மதத்தையோ கேட்கக்கூடாது. அப்படிக் கேட்பது கடும் குற்றம். கேட்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
போராளிகளுக்கு இப்படியெல்லாம் கட்டுப்பாடு விதித்த பிரபாகரனே, அதை மீறி திருமாவளவனிடம் தன் சாதியைப் பற்றி ஒருபோதும் சொல்லி இருக்க மாட்டார். என்று படபடத்தவர் தொடர்ந்து,
சாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட பிரபாகரனை அவர் களங்கப்படுத்துவதை தமிழ் உணர்வாளர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சாதியை மறுத்து, ஒதுக்கிய சான்றோர்களை எல்லாம் சாதியால் அடையாளப்படுத்துவது தவறானது. என்றார் சீறலுடன்.
இது குறித்து திருமாவளவனுக்கு கூட்டாகக் கடிதம் அனுப்ப தமிழ் உணர்வாளர்கள் தயாராகி வருகிறார்கள்!
No comments:
Post a Comment