Monday, January 31, 2011

மீனவரைக் காக்க இணையப் பிரச்சார இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்-சீமான்.

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

சமீபத்தில் நடந்த துனிசியா புரட்சியை நாம் பத்திரிக்கைகளில் படித்து ட்விட்டர் என்ற இணையதளம் மூலமாகவே மக்கள் புரட்சிக்கு வித்திட்டிருக்கிறார்கள், இணையம் என்பது வெறும் பொழுதுபோக்கிற்கான இடம் இல்லை என்பதை அறிந்து மெய் சிலிர்த்தோம்.அம்மக்களைப் போன்று நம் தமிழ் இளைஞர்களும் ஆர்வலர்களும் சேர்ந்து சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்படும் துயர நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வலியுறுத்தி, இணையத்தில் பிரசாரத் தளம் ஒன்றை நிறுவியுள்ளதை அறிந்து இணையம் பார்த்து அகமகிழ்ந்தேன்.மறத் தமிழன் முத்துக்குமார் நினைவுநாளில் அந்த மகத்தான மனிதனின் தியாகத்திற்கு உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
உலகெங்கும் வாழும் எம் தாய்த்தமிழ் இளைஞர்கள் மிகுந்த இனப்பற்றோடும் அரசியல் மாற்றத்திற்கான தேவையை அறிந்தவர்களாகவும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதற்கான விழிப்போடும் இருக்கிறார்கள்.மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க.,காங்கிரஸ் அரசுகளின் கையாலாகத்தனத்தாலும் எதிரிகளின் இன அழிப்பிற்கு உதவி புரிவதன் மூலமும் எங்கள் தமிழ் இளைஞர்கள் அதற்கு எதிராய் களத்தில் இறங்கத் தள்ளபட்டிருக்கிரார்கள். இணையத்தை பிரசார ஆயுதமாக்கி உலகிற்கு நம் மீனவர்களின் பிரச்சனையை எடுத்து செல்ல முனைந்திருக்கும் தமிழ்த் தம்பிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துகொள்கிறேன்.இதுவரை பங்கு பெறாதவர்கள் உடனடியாக ட்விட்டர் இணையத்தில் #tnfisherman என்பதை இணைத்து நம் மீனவ சொந்தங்களின் துயரத்தை உலகிற்கு எடுத்துக் காட்டுமாறு உரிமையுடன் கேட்டுகொள்கிறேன். ஈகி முத்துக்குமார் நினைவுநாளில் நாம் தமிழராய் ஒன்றிணைத்து என்றும் மீனவர் நலனுக்காகவும் தமிழர் மேன்மைக்காகவும் எந்த சமரசமும் இல்லாது பாடுபடுவோம் என்று உறுதியெடுப்போம்.

No comments:

Post a Comment

ebook