அன்புள்ள தாமரை அவர்களே,
தாங்கள் அண்ணன் சீமானுக்கு எழுதியிருக்கும் மடலை முழுமையாக படிக்க நேர்ந்தது. அதில் முன்வைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸை அழிக்க வேண்டும் என்ற தங்களுடைய தீர்க்கமான பார்வை ஒரு வரலாற்றுப்பார்வை. தமிழர்கள் போராடும் போதெல்லாம் வட இந்திய துணை ராணுவப்படைகளை களமிறக்கி சுட்டுப்பொசுக்கியே கறை படிந்த கைகளையுடையது கட்சி காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சி இன்னொருமுறை தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டில் ஏறினால் இருக்கும் கொஞ்ச நஞ்ச போராட்ட சக்திகளையும் அடக்குவதற்கு ஒரு நிகழ்சிநிரலை அரங்கேற்றுவார்கள் என்பது திண்ணம்.
காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்பதை இந்தக் கதை நமக்கு தெள்ளென சொல்கிறது. இந்த வாய்ப்பை - மூக்கை நுழைக்க இடம் கொடுக்கும் வாய்ப்பை - இன்று காங்கிரஸுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்போவது யார்? விடை தெளிவாக இருக்கிறது. கருணாநிதிதான்! நாளை கூடரத்தையே ஆக்கிரமிக்கப் போகும் காங்கிரசை அவரது மகன்களாலேயே முறியடிக்க முடியாமல் ஒட்டுண்ணி பிழைப்பும், இந்திய தேசிய வழிபாடும், இறையாண்மை போலித்தனமும் என்று தமிழகம் நூறு ஆண்டுகள் பின்னோக்கி செல்லப்போகிறது.
அன்புள்ள தாமரை அவர்களே, இந்த நிலை ஏற்படுவதை தவிர்க்க இன்று என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டுமல்லவா? அதைத்தானே அண்ணன் சீமான் செய்கிறார்? செய்ய மட்டுமில்லை, தான் செய்வதை அவர் ஒளிவு மறைவு இன்றி ஒப்புக்கொள்கிறார். ஜெயலலிதா காங்கிரசுப் பக்கம் சாய்ந்தால் ஜெயலலிதாவையும் சேர்ந்து எதிர்க்கப்போவதாக வெளிப்படையாகவே அறிவித்து விட்டார். இதற்கு மேல் என்ன வேண்டும்? தாங்கள் அண்ணன் சீமானிடம் கேட்டிருக்கும் கேள்விகளில் ஒன்று :
“உங்கள் தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சேவைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கேவை நம் அண்ணன் பிரபாகரன் ஆதரித்திருக்க வேண்டும், அப்படித்தானே? இதைத்தான் இந்து ராம் சொன்னார், நக்கீரன் பேட்டியில் ரணிலே சொன்னார், கலைஞரும் ஆமோதித்தார். அண்ணனுக்கு அருவருப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதம் உங்களுக்கு மட்டும் தேர்தல் வியூகமாகத் தெரிவது எப்படி இயக்குனரே?”
ஒருமுறை லெனின் தன்னுடைய அமைச்சர்கள் வெளிநாட்டு அமைச்சர்களோடு பேச்சுவார்த்தை நடத்தப் போகவிருந்த வேளையில், லெனினிடம் கலந்தாலோசித்தார்கள். அப்போது அமைச்சர்கள் “அவர்கள் (வெளிநாட்டு அமைச்சர்கள்) முதலாளித்துவ பாணியில் உடை அணிந்திருப்பார்கள். நாமும் அப்படியா போவது?” என்று கேட்டார்கள். அதற்கு லெனின் என்ன சொன்னார்? “சோஷலித்தின் நோக்கத்தை ஈடேற்ற வேண்டுமானால் பாவாடை கட்டிக்கொண்டு கூடப் போங்கள்’ என்றார் லெனின். அண்ணன் சீமான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது ஒன்றும் அருவருப்பானது இல்லை என்பது விளங்கியிருக்கும்.
ஒருவேளை கூட்டணியில் ‘திடீர்’ மாற்றம் ஏற்பட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துவிட்டால் உங்கள் ‘வியூகம்’ என்னாகும்? அப்போது காங்கிரசை ஒழிப்பதற்காகக் கலைஞரை ஆதரிப்பீர்களா? - இது நீங்கள் சீமான் அவர்களிடம் கேட்கும் மற்றொரு கேள்வி.
காங்கிரஸை ஒழிப்பததுதான் தலையாயக் குறிக்கோள் என்று சீமான் அவர்கள் ஏறகனவே கூறி விட்டாரே.
மேலும் நீங்கள் கேட்கிறீர்கள்... ‘அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் சீமான் இருக்குமிடம் சிறைதான்’ என்கிறீர்கள். சரி, தமிழீழ ஆதரவாளர்களை - வைகோ, நெடுமாறன், சீமான் யாராயினும் - ஒடுக்குவதில் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அதிமுக ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும்.
தி.மு.க., அ. தி. மு.க. இருக்கும்வரை அவர்களை எதிர்த்து விமர்சனம் செய்யவாவது தமிழர்களுக்கு உரிமை இருக்கும். காங்கிரஸு ஆட்சியில் இருந்தாலோ தமிழர்கள் அனைவரும் ‘இந்திய தேசிய பக்தர்கள்’ ஆக்கப்பட்டு விடுவார்கள் - ஈழம் சிங்களமயமாவதைப்போல. ஆந்திராவைப்போல, கர்னாடகாவைப்போல, மகாராஷ்டிராவைப்போல, பிஹாரைப்போல, குஜராத்தைப்போல தமிழகமும் மாறும். தாமரை அவர்களே, அத்தகைய மாற்றத்தை விரும்புகிறீற்களா?
உங்களுடைய அடுத்த கேள்வி - ஐந்தாண்டு கழித்து (ஜெ'யின் உண்மை உருவத்தைப் பார்த்து, ‘அதிர்ந்து’போய், மேடை, சிறை, வழக்கு, வாய்தாவெல்லாம் முடித்து) - அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?
அடுத்த தேர்தல்வரை நீங்கள் குறிப்பிடுவது எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை தயவு செய்து நினைவில் வைத்திருங்கள்.
சீமான் அவர்களின் வியூகத்தை திருமாவுடன் ஒப்பிட்டு நீங்கள் கேட்பது : அவரை எதிர்ப்பதற்காக இவரையும், இவரை எதிர்ப்பதற்காக அவரையும் ஆதரித்து தேர்தலுக்குத் தேர்தல் கால்பந்தாக மாறி.. ஐயகோ.. அதைத்தானே இயக்குனரே, எங்கள் அன்பிற்கினிய வைகோ அவர்களும் தோழர் திருமாவளவனும் செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகத் தமிழகம் இந்தக் கால்பந்து விளையாட்டைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது!
வை.கோ. அவர்கள் அவ்வாறு செய்வதால்தான் அவரால் தொடர்ந்து தமிழீழ ஆதரவாளராக, உலகத் தமிழரின் ஒரே குரலாக இருக்க முடிகிறது. கருணாநிதியோடு சேர்ந்திருத்தால் வை.கோ. இன்று காணாமல் போயிருப்பார் என்று தோன்றவில்லையா உங்களுக்கு? திருமாவளவன் காணாமல் போகும் கட்டத்தை நோக்கி விரைந்து போய்க்கொண்டிருக்கிறார். அவருக்காக பரிதாபப்படுங்கள்.
காங்கிரஸை ஒழித்திட உங்கள் ஆலோசனை வரவேற்கத்தக்கது. நீங்கள் சொல்கிறீர்கள் : ‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்’ என்ற அடிப்படையில் காங்கிரசைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் கழகங்கள் இரண்டும் தமிழ்நாட்டை, தமிழரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டி வரும். அந்த நிலையை ஏற்படுத்துவதே நம் போன்றோரின் அவசரக் கடமை."
அதற்கு என்ன வழி என்று சொன்னீர்களா தாமரை அவர்களே? அண்ணன் சீமான் அதற்கொரு வழியாக அ.தி.மு.க.வை ஆதரிக்கும் முடிவெடுத்திருக்கிறார். அதையும் எதிர்க்கிறீர்கள். வேறு என்ன மாற்று வழியை முன்வைக்கிறீர்கள். கருணாநிதியை ஆதரிப்பதையா? அதன்மூலம் நாம் எதை ஒழிக்க விரும்புகிறோமோ அது கூடாரத்தை ஆக்கிரமித்த கதையாகி விடும்.
சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுகவையும் அதிமுகவையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும் - இந்த கேள்வியில் உங்கள் அக்கறை புரிகிறது.
ஆனால் தனிமைப்படுத்துவது எப்படி தாமரை அவர்களே?
உங்களுடைய ஆலோசனை சரியாகவே வருகிறது உங்கள் மடலில் : ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று ‘நாம் தமிழர்’ கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.
ஆனால் இதனால் தமிழ் தேசியவாதிகள்தான் தனிமைப்ப்படுவார்கள். கருணாநிதியும், காங்கிரஸும் அடுத்து ஆட்சியை பங்கு போட்டுக்கொண்டால் தமிழ் தேசியச் சிந்தனை தரைமட்டமாக்கப்படும். மக்கள் ஏற்கனவே இலவசங்களின் கைப்பாவைகளாகி கிடக்கின்றனர். இந்த லட்சணத்தில் கருணாநிதியை வைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சென்று தமிழர் கட்சியமைப்பை வலுப்படுத்த முடியுமா? இன்றைய நிலையில் அ.தி.மு.க. ஆட்சியமைத்தால் வைகோ அவர்களும் அண்ணன் சீமான் அவர்களும் ஊர் ஊராகச் செல்லவாவது வாய்ப்பு கிடைக்கும். கருணாநிதி ஏற்கனவே அந்த முயற்சிகளை தடை செய்து கொண்டிருக்கிறார் என்பதை நினைத்து பாருங்கள் தாமரை அவர்களே.
- நிலவரசு கண்ணன்
நன்றி : ஈழதேசம்
No comments:
Post a Comment