வைகோ, பழ.நெடுமாறன், தா.பாண்டியன் உட்பட ஏராளமானோர் கைது. தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை மூட வலியுறுத்தி சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, தா.பாண்டியன், பழ.நெடுமாறன் உள்பட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு முடிந்த நிலையில், சிதையை இலங்கை ராணுவத்தினர் அவமதித்ததாகக் கூறப்பட்டது. இதைக் கண்டிக்கும் வகையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை மைலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது அந்த இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறியது : பார்வதி அம்மாளின் சிதையில் மனித நேயமற்றமுறையில் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார் இலங்கை அதிபர் ராஜபட்ச. இந்திய அரசின் உதவியால்தான், இலங்கை ராணுவத்தினரால் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடிந்தது. இப்போது இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருவதால்தான் இது போன்ற இழிவான செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த செயல் உலக தமிழர்களை அவமதித்ததற்கு சமம். எனவே சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார் பழ. நெடுமாறன்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ : பார்வதி அம்மாளின் சடலத்தை அவமதிப்பு செய்த இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொடூர செயலுக்கும், பார்வதி அம்மாள் இறப்புக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுதான் காரணம். பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க அனுமதி கிடைத்திருந்தால், இப்போது அவர் உயிருடன் இருந்திருப்பார்.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக மீனவர்களுக்கும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டது. எனவே சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை உடனடியாக இழுத்து மூட வேண்டும். இல்லை என்றால் நாங்களே இழுத்து மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் : இலங்கை அதிபர் ராஜபட்ச பொதுவான நெறி எதையும் கடைப்பிடிப்பது இல்லை. இலங்கையுடனான உறவை இந்திய அரசு உடனடியாக துண்டிக்க வேண்டும்.
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து இலங்கை, மத்திய அரசை கண்டிக்கும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது ராஜபட்ச உருவ பொம்மை, இலங்கை தேசியக் கொடிகளை கூட்டத்தினர் தீ வைத்து எரித்தனர்.
இதைத் தொடர்ந்து இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற பழ.நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், புதிய பார்வை இதழ் ஆசிரியர் நடராஜன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோரை மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பெரியய்யா தலைமையிலான போலீஸôர் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment