Saturday, December 18, 2010

இந்திய மத்திய உளவுத்துறையின் செய்தியும்! உறுத்தும் கேள்விகளும்!

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய முக்கியத் தலைவர்களை டிசம்பர் 20ம் தேதிக்குள் தீர்த்துக் கட்டும் திட்டத்துடன் விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளார்கள்” என்று இந்திய உளவு அமைப்பு அளித்துள்ள எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு..........

.....பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இத்தகவலை தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக இருக்கும் லத்திகா சரண் தெரிவித்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பிரதமர் உட்பட தமிழ்நாட்டிற்கு வரும் முக்கியத் தலைவர்களைத் தாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை தங்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளதாகவும், “அந்த தகவல் உண்மையானது தானா? என்பதையறிய தமிழக காவல்துறையின் உளவு‌ப் பிரிவு முடுக்கிவிடப்பட்டுள்ளது” என்றும் லத்திகா சரண் கூறியதாக தமிழ் நாளேடுகளில் செய்திகள் வந்துள்ளன.
இப்படிப்பட்ட செய்திகளின் உண்மைத் தன்மையை எவ்வாறு அறிவது என்று தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், அவர்களோடு தமிழக முதல்வரையும் தீர்த்துக்கட்டும் திட்டத்துடன் விடுதலைப் புலிகளோ அல்லது வேறு ஏதாவது ஆயுதக் குழுக்களோ தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது என்றால், அதனை ஏன் வெளி்ப்படையாக அறிவிக்க வேண்டும்? அவர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த தகவல் வந்தவுடன், காவல் துறையை மட்டும் எச்சரிக்கை செய்து, அவர்கள் ‘ஒன்றிணைய’ திட்டமிட்டுள்ள இடத்தை சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்துவிடலாம் அல்லது தமிழக காவல் துறைக்கே உரித்தான பாணியில் என்கவுண்டர் செய்துவிடலாமே? அதைச் செய்யாமல் இந்தியாவின் உளவு அமைப்பு தமிழக காவல் துறைக்கு அளித்த எச்சரிக்கையை பத்திரிக்கையாளர்களை அழைத்து, பெயரைக் குறிப்பிடாமல், செய்தி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை!
ஒருவேளை நாட்டின் தலைவர்களுக்கு வந்துள்ள ஆபத்தை மக்களைக் கொண்டு தடுக்க முற்படுகிறதா இந்தியாவின் உளவுத் துறையும், தமிழக காவல்துறையும்? எதற்காக இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு அச்ச உணர்ச்சியைத் தூண்ட வேண்டும். ஒரு வேளை இப்படி ஒரு செய்தி வெளியிடப்பட்டால், ஒரு திட்டத்துடன் வந்துள்ள அவர்கள், ‘ஓ நமது திட்டம் அரசிற்கு தெரிந்துவிட்டது’ என்று நினைத்து திரும்பிப் போய்விடுவார்களா?
இப்படி ஒரு செய்தி கொடுப்பதன் தாற்பரியம் என்னவோ?
அந்த செய்தியோடு மற்றொரு செய்தியும் வாலாக ஒட்டிக்கொடுக்கிறார்கள். அது பிரதமரின் தமிழக வருகை.
தமிழ்நாட்டின் தலைநகருக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடப்பதால் அவருடன் உள்துறை அமைச்சராக இருக்கிற நமது சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான ப.சிதம்பரமும் வருவார். அந்த நிகழ்ச்சியில் தமிழ்தாட்டின் முதல்வரும் கலந்துகொள்வார் என்பதெல்லாம் குழந்தையறிந்த விடயங்கள்.
பிரதமருடைய வருகையின் போது அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதெல்லாம் நாடறிந்த விவரம். பிரதமர் கலந்துகொள்ளப் போகும் நிகழ்வு நடைபெறும் இடத்தை சுற்றிலும் மட்டுமின்றி, அங்கிருக்கும் பெரும் கட்டடங்கள் எல்லாம் தேசப் பாதுகாப்பு படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு, அங்கெல்லாம் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நிறுத்தப்படுவார்கள். அந்தப் பகுதிக்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் வந்துவிட்டுப் போகும்வரை போக்குவரத்து நிறுத்தப்படும். காக்காய் குருவிகள் கூட சிரத்தையுடன் துரத்தப்படும். அவர்கள் என்ன சாதாரண மக்களா? ஆபத்து சூழ்ந்துவிடுவதற்கு? எனவே, பிரதமரின் வருகைக்காக செய்யப்படும் ஏற்பாட்டில் மேலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும், இந்த எச்சரிக்கையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றெல்லாம் செய்திகள் கொடுக்கிறது காவல்துறை. எதற்கு இதையெல்லாம் மக்களுக்கு இவ்வளவு சிரத்தையுடன் சொல்கிறீர்கள்? இவர்களுக்கு செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது யாரும் கேள்வி எழுப்பப் போகிறார்களா என்ன?
எனவே அரசின் இப்படிப்பட்ட செய்தி பரப்பலின் பின்னணியில் ஒரு விடயம் இருப்பது உறுதியாகத் தெரிகிறது. இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசின் ஒடுக்குமுறையில் இருந்து தமிழீழ மக்களை விடுவிக்க போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி ஏதாவது ஒரு அவதூறை அவ்வப்போது பரப்பிவரும் வேலையை இந்திய உளவு அமைப்பு தொடர்ந்து செய்து வருகிறது.
சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இரண்டு ஆண்டுகள் நீ‌ட்டித்து உள்துறை அமைச்சகம் அரசிதழ் வெளியிட்டது. மத்திய அரசு பிறப்பித்த அந்த உத்தரவை உறுதி செய்வதற்காக, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான ஒரு நபர் தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையின் போதுகூட, இந்தச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதுபோல், “இலங்கையில் இருந்து தப்பிவரும் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் ஒன்றிணைய முயன்று வருகிறார்கள். அது இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகும்” என்று அரசின் சார்பாக கூறப்பட்டது. அதைக் கேட்ட நீதிபதி, அதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டார். இது உளவுத் தகவல் என்று அரசு அதிகாரி கூறினார். அதற்கு நீதிபதி, “இப்படி யார் வேண்டுமானாலும் கூறலாமே?” என்று திருப்பிக் கேட்டார்.
ஏதோ அவர்கள் அங்கிருந்து தப்பி வந்து இங்கு ஒன்றிணைவதை பக்கத்தில் இருந்து பார்த்தவர்கள் போல் கூறுவது எவ்வளவு பெரிய ஜோக் என்பது சற்று யோசித்தாலே புரியும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அது விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட அதே நாளில் இப்படி ஒரு செய்தி வெளியிடப்படுகிறது என்பதையும் இணைத்துப் பார்க்கத் தூண்டுகிறது.
ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முதலில் பயங்கரவாத இயக்கம் என்றது இந்திய அரசு. ஆனால் அதனை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்த பிறகு, சட்டத்திற்குப் புறம்பான இயக்கம் என்று கூறியே தொடர்ந்து தடையை நீ‌ட்டித்து வருகிறது. அதற்கான காரணம் எதுவும் கிடைக்காத நிலையில்தான், இப்படி ‘தமிழ்நாட்டில் ஒன்றிணைகிறார்கள்’, ‘இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்’, ‘தலைவர்களின் உயிருக்கு ஆபத்து’ என்றெல்லாம் தொடர்ந்து கதைகட்டுகின்றனர்.
இதையெல்லாம் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் ஏன் வருகிறது என்றால், விடுதலைப் புலிகளை இந்தியாவின் எதிரியாகக் காட்டுவதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கே. அந்த காரணத்தைக் காட்டித்தான் ராஜபக்ச அரசின் தமிழினப் படுகொலைக்கு ராடாரி்ல் இருந்து உளவு உதவி, இராணுவ உதவி என்று அனைத்தையும் செய்தது மத்திய அரசு. சொந்த நாட்டு மக்கள் மீதே தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை இறுதிக்கட்டப் போரில் ராஜபக்ச இராணுவம் அழித்தொழித்தற்கு இந்தியாவின் இந்த ஆதரவே அரணாக நின்றது. ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை ராஜபக்ச அரசும் இராணுவமும் இனப் படுகொலை செய்து முடிக்க இந்திய அரசுதான் துணை நின்றது.
ராஜபக்சவின் நடவடிக்கைகள் அனைத்திற்கும் துணை நின்ற இந்திய மத்திய அரசு, இன்றைக்கும் உலக அளவில் போர்க் குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம் ஆகியவற்றிற்கு ஆளாகியுள்ள ராஜபக்சவை அரசு விருந்தினராக அழைத்துக் கெளரவிக்கிறது. அதுமட்டுமல்ல, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ராஜபக்ச அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சீனாவுடன் சேர்ந்து தோற்கடித்ததோடு மட்டுமின்றி, அதற்கு ஆதரவான ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றிக் கொடுத்தது இந்திய அரசு.
இவை யாவும் இன்று தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயங்களாகும். இதை மறைக்கவும், விடுதலைப் போராளிகளை திட்டமிட்டே பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சியே இப்படிப்பட்ட செய்திகள் என்று நிச்சயமாகக் கருத இடமிருக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக சட்டப்படி அறிவிப்பதன் மூலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை இந்திய அரசு மறுக்கிறது. சிறிலங்க படையினரின் மிருக வெறிக்கு ஆளாகி தங்கள் சொத்தையும். சொ‌ந்தங்களையும் இழ‌ந்து இங்கு அடைக்கலம் வந்த ஈழத் தமிழ் அகதிகளை தொடர்ந்து, ஒரு வன்மத்துடன், அவர்களுக்கு எந்த உரிமையும் அளிக்காமல் வதைத்து வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்றே கூறி கடந்த 27 ஆண்டுக்காலமாக தமிழக மீனவர்களை தாக்கிவரும் சிறிலங்கா கடற்படையின் அடாத செயலை கண்டிக்காமல், உண்மைக் கூற வேண்டுமெனில், காட்டிக் கொடுத்து வருகிறது. உலகின் எந்த நாட்டு மீனவர்களாவது தமிழக மீனவர்கள் போல் அண்டை நாட்டு (அதுவும் சுண்டைக்காய் நாடு)  கடற்படையினரால் தாக்கப்படுகிறார்களா? பதில் சொல்லட்டும் இந்திய அரசு. இவை தமிழீழ மக்கள் அண்டை நாடுகளில் இருந்து இங்கே அகதிகளாய் தஞ்சமடைந்துள்ள தங்கள் சொந்தங்களை காண வந்தால், விமான நிலையத்தில் வைத்தே, ஏதோ ஒரு காரணத்தைக் கூறி திருப்பி அனுப்புகிறது.
இந்தியாவில் அடைக்கலமாகியுள்ள திபெத் அகதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை கண்டவர்களுக்குத் தெரியும், தமிழீழ அகதிகள் எப்படியெல்லாம் நடத்தப்படுகிறார்கள் என்று. எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் தமிழ்நாட்டு தமிழ் மக்களின் தார்மீக உரிமையை தடுக்கிறது இந்திய அரசு.
ஆனால், உலகமே ஒத்த குரலில் போர்க் குற்றவாளி என்று குற்றஞ்சாட்டும் அரச பயங்கரவாதியை அரவணைத்து விருந்தளிக்கிறது இந்திய மத்திய அரசு.
இத்துணை அநியாயங்களையும் செய்வதற்குத்தான் அது விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டத்திற்குப் புறம்பான இயக்கம் என்று தடை விதிக்கிறது. அதனை உறுதிப்படுத்திக்கொள்ளவே இப்படி ஒரு உளவு விளையாட்டை அடிப்படையின்றி விளையாடுகிறது.
தன்னிடம் உண்மையிருந்தால், நியாயமிருந்தால் இந்திய அரசு பதிலளிக்கட்டும்.

No comments:

Post a Comment

ebook